அதிகாரிகள் வேலைநிறுத்தத்தால் வங்கிகள் வெறிச்சோடின ரூ.10 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு


அதிகாரிகள் வேலைநிறுத்தத்தால் வங்கிகள் வெறிச்சோடின ரூ.10 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2018 4:15 AM IST (Updated: 21 Dec 2018 7:40 PM IST)
t-max-icont-min-icon

வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று வேலூர் மாவட்டத்தில் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

வங்கி அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும், வாரத்தில் 6 நாள் வேலை என்பதை 5 நாட்களாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று வேலைநிறுத்தம் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 350 வங்கி கிளைகள் உள்ளன. அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று வங்கிகளில் ஊழியர்கள் சிலர் பணிக்கு வந்திருந்தாலும் எந்த பணிகளும் நடக்கவில்லை. பண பரிவர்த்தனைகளும் நடக்கவில்லை. இதனால் அனைத்து வங்கிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலைநிறுத்தம் காரணமாக ரூ.10 ஆயிரம் கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கனரா வங்கி முன்பு வங்கி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க உதவித்தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சம்பத், கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.


Next Story