ராணுவவீரர் சாவில் சந்தேகம்: மறு பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
ராணுவ வீரர் சாவில் சந்தேகம் இருப்பதால் மறு பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை,
ஆரணி தாலுகா அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பாலசுந்தரம் தனது மனைவி மேகனா மற்றும் மகனுடன் அங்குள்ள ராணுவ குடியிருப்பில் தங்கியிருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 20–ந் தேதி குடும்ப விசேஷத்திற்காக அம்மாபாளையத்திற்கு குடும்பத்துடன் வந்தார்.
கடந்த மாதம் 19–ந் தேதி இரவு 9.30 மணியளவில் நிலத்திற்கு நீர் பாய்ச்ச பாலசுந்தரம் சென்றார். மறுநாள் காலை அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் பாலசுந்தரம் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேகனாவிற்கு அங்கு சென்று பார்த்த போது, அவரது உடலில் காயங்கள் இருந்து உள்ளன. இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது கணவர் பாலசுந்தரம் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், மீண்டும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மேகனா கடந்த 13–ந் தேதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மேலும் அந்த மனுவில், போலீசார் அவர்களாக புகார் மனு எழுதி கொண்டு தன்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டதாகவும், தனக்கு வேறு வழியின்றி அந்த மனுவில் கையெழுத்து போட்டதாகவும் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் மனு குறித்து மேகனாவிடம் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார். அதில், பாலசுந்தரத்தின் மரணத்தில் மேகனாவிற்கு ஏற்படும் சந்தேகத்தை கருத்தில்கொண்டும், நீதியின் நலன் கருதி பாலசுந்தரம் பிணத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
அதனால் அம்மாபாளையம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பாலசுந்தரத்தின் பிணத்தை ஆரணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, தகுதி வாய்ந்த மருத்துவக்குழுவை நியமித்து மனுதாரரான மேகனா மற்றும் ஆரணி தாசில்தார் முன்னிலையில் வருகிற 24–ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்குள் மறு பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை வருகிற 26–ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.