உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிர்ப்பு: தலையில் துண்டு-வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம் 5-வது நாளில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு


உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிர்ப்பு: தலையில் துண்டு-வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம் 5-வது நாளில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 11:00 PM GMT (Updated: 21 Dec 2018 4:29 PM GMT)

உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலையில் துண்டு மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். 5-வது நாளான நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

ஈரோடு, 

தமிழகத்தில் 13 மாவட்டங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விவசாய நிலங்களில் போடப்படும் மின்கோபுரங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் புதிய மின்கோபுர திட்டங்களை செயல்படுத்தாமல், கேபிள்கள் வழியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 17-ந் தேதி முதல் 8 மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டை அடுத்து உள்ள மூலக்கரை பகுதியில் உயர் அழுத்த மின்கோபுர பணி நடைபெறும் விவசாய நிலம் அருகே காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. தினந்தோறும் ஆண்களும், பெண்களுமாக விவசாயிகள் திரளாக கூடி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தினமும் வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

5-வது நாளாக போராட்டம் நேற்று காலையில் தொடங்கியது. போராட்டத்துக்கு கொங்கு பூபதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, சி.எம்.துளசிமணி, ராசு, கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் தங்கள் தலையில் வெள்ளை துணியால் முக்காடு அணிந்து இருந்தனர். வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

5 நாட்களாக போராட்டம் நடத்தியும், அரசு கண்டுகொள்ளாததை உணர்த்தும் வகையில் கருப்பு துணியை வாயில் கட்டியும், எங்கள் நிலத்தை முழுமையாக மின்கோபுரங்களுக்காக எடுத்துக்கொண்டால் நாங்கள் தலையில் முக்காடு போட வேண்டியதுதான் என்பதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


நேற்று நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு ஆதரவு அளித்து பேசினார்.

தி.மு.க. சார்பில் பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோரும் பேசினார்கள்.

போராட்டத்தில் ஈரோடு மாவட்ட அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.காசியண்ணன், கீழ்பவானி பாசன சபை செயலாளர் கி.வடிவேல், பவானிநதிநீர் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஏ.ராமசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் சென்னிமலை எஸ்.பொன்னுசாமி, வி.பி.குணசேகரன், வக்கீல் மு.ஈசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று 5-வது நாளாக நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கான இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்று போராட்டம் வெற்றி பெற செய்ய வேண்டும். மாணவ-மாணவிகள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் வந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story