மேல்புறம் அருகே விவசாயி அடித்துக்கொலை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


மேல்புறம் அருகே விவசாயி அடித்துக்கொலை வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 5:17 PM GMT)

மேல்புறம் அருகே மாட்டை திருடியதை தட்டிக்கேட்ட விவசாயியை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

களியக்காவிளை,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குமரி மாவட்டம் மேல்புறம் அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வதாஸ் (வயது 63), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுபின் (31) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று செல்வதாஸ் தனக்கு சொந்தமான மாட்டை அந்த பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் கட்டியிருந்தார்.

சிறிதுநேரம் கடந்து சென்று பார்த்த போது மாட்டை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, சுபின் மாட்டை திருடி கொண்டு சென்றதாக கூறினர்.

இதையடுத்து, செல்வதாஸ், சுபினின் வீட்டுக்கு சென்று ‘எனது மாட்டை ஏன் திருடி வந்தாய்’ என தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுபின் அருகில் கிடந்த மரக்கட்டையால் செல்வதாஸ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே, சுபின் அங்கிருந்து தப்பி ஓடினார்.

அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் செல்வதாசை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சுபின் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில், செல்வதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சுபின் மீது போலீசார் பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி அவரை தேடினர். இதற்கிடையே அவர் கேரளாவுக்கு தப்பி சென்றதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story