உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி - குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் ஆத்திரம்


உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி - குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் ஆத்திரம்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:00 PM GMT (Updated: 21 Dec 2018 5:20 PM GMT)

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டுக்குள் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் குடிபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்தார். பின்னர் அவர் அந்த வார்டுக்குள் யாரையோ தேடிக் கொண்டிருந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை, குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, அவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அந்த வாலிபர் பலத்த காயமடைந்தார்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாதூரை சேர்ந்த சப்பையன் மகன் மணிகண்டன் (வயது 35) என்பதும், தனது தந்தையை தேடி மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனுக்கு டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளித்து விட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story