மேல்கொல்லப்பல்லி கொட்டாற்றில் ரூ.1 கோடியில் பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்
குடியாத்தம் அருகே மேல்கொல்லப்பல்லி கொட்டாற்றில் ரூ.1 கோடியில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
குடியாத்தம்,
குடியாத்தம் ஒன்றியம் தனகொண்டபல்லி, மோடிகுப்பம் மற்றும் மோர்தானா ஊராட்சிகளை சேர்ந்த கிராம பகுதிகள் ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது. ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் மொகிலி, கீரமந்தை உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. குடியாத்தம் ஒன்றியம் தனகொண்டபல்லி கிராமத்திற்கும் மேல்கொல்லப்பல்லி கிராமத்திற்கும் இடையே கொட்டாறு உள்ளது.
இந்த கொட்டாறு மோடிகுப்பம், ஆர்.கொல்லப்பல்லி, சேங்குன்றம், தட்டப்பாறை, சீவூர் வழியாக பல கிலோமீட்டர் கடந்து குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியில் கவுண்டன்ய மகாநதியில் கலக்கிறது.
கடந்த ஆண்டு பெய்த கனமழையால் கொட்டாற்றில் பெருவெள்ளம் சென்றதால் மேல்கொல்லப்பல்லி கிராமம் துண்டிக்கப்பட்டது. அப்போது கிராம பொதுமக்கள் மழைவெள்ள காலங்களில் கிராமம் துண்டிக்கப்படுவதாகவும், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பாலம் கட்டிக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். இதுதொடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியின் எதிரொலியாக மறுநாள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து கொடுத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதனிடம் நிரந்தரமாக பாலம் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நபார்டு திட்டத்தின்கீழ் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 18 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்தில் கொட்டாற்றில் பாலம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியது.
இதனைத்தொடர்ந்து நேற்று பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வி.ராமு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் டேவிட்தர்மராஜ், லைலா, வனராஜ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் செ.கு.வெங்கடேசன், செருவங்கி மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் கொட்டமிட்டா பாபு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி நிர்வாகி கோபி, அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் காசிநாதன், மூர்த்தி, தேவிகா, பெருமாள், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய உதவி பொறியாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story