‘விழுப்புரத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்குவோம்’ கலெக்டர் சுப்பிரமணியன் பேச்சு


‘விழுப்புரத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்குவோம்’ கலெக்டர் சுப்பிரமணியன் பேச்சு
x
தினத்தந்தி 21 Dec 2018 10:00 PM GMT (Updated: 21 Dec 2018 5:27 PM GMT)

விழுப்புரத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்குவோம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது என அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் அருண் வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசுகையில், பிளாஸ்டிக் பைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. பல்வேறு விதமான நோய்கள் பரவுகிறது. அதனால் வருகிற 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், கப் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

ஒரே நாளில் ஒரு குடும்பத்தினர் சராசரியாக 8 முதல் 10 பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துகிறார்கள். எனவே வியாபாரிகளாகிய நீங்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் துணி பைகளை கொடுத்து விட்டு, அடுத்த முறை வருகிற போது துணி பையுடன் வந்தால்தான் பொருட்கள் தருவேன் என்று கூறுங்கள். ஓட்டலிலும் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது.

பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக மாற்ற பொதுமக்கள், வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை இனி பயன்படுத்த மாட்டோம் என உறுதி ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர்கள் செல்வக்குமார், முத்துக்கருப்பன், தங்கராசு, அசோகன், அபரஞ்சி, அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயக்குமார், நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி மற்றும் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், சின்னசேலம், கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெமினி நன்றி கூறினார்.

Next Story