அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எல்லப்புடையான்பட்டி ஊராட்சியில் கெளாப்பாறை ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 39 லட்சம் மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் முறைகேடு வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாளை வெளியிட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் மக்கள் நலனுக்காக தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த திட்டமாக இருந்தாலும் அதை கொண்டுவராமல் இருக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
Related Tags :
Next Story