தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நேரில் ஆய்வு அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்


தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நேரில் ஆய்வு அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்
x
தினத்தந்தி 21 Dec 2018 11:15 PM GMT (Updated: 21 Dec 2018 6:44 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த்ராவ் விஷ்ணுபாட்டில், இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஆனந்த்ராவ் விஷ்ணுபாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் மேற்கொண்டு வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் கலந்து கொண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் தொடர்பான கருத்துகளை கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கவிதா, உதவி கலெக்டர்கள் வின்சென்ட் ராஜசேகர், புண்ணியகோட்டி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அனைத்து தாசில்தார்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம் செய்தல், பிழைதிருத்தம் செய்தல் ஆகிய பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். விடுபடுதல் மற்றும் பிழைகள் இல்லாத வகையில் முழுமை பெற்ற வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Next Story