பெரம்பலூரில் ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசம்


பெரம்பலூரில் ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசம்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:15 AM IST (Updated: 22 Dec 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தினர்.

பெரம்பலூர்,

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத் தலைமையிலான 33 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜெய்பாரத் எனும் ராட்சத பலூனில் பறந்து செல்லும் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆசியாவில் மிகப்பெரிய ராட்சத பலூனான 3 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட இந்த பலூனில் 4 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால், மீதமுள்ள ராணுவ வீரர்கள் பலூனை தரைவழியாக ராணுவ வாகனத்தில் பின்தொடர்ந்து பலூன் தரையிறங்கும் இடத்திற்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து சுழற்சி முறையில் 4 ராணுவ வீரர்கள் பலூனில் ஏறி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சாகச பயணம் கடந்த 6-ந் தேதி காஷ்மீரில் தொடங்கியது. இந்தியா முழுவதும் 31 முக்கிய நகரங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 29-ந் தேதிக்குள் செல்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் டெல்லி, போபால், திருப்பதி, சென்னை காஞ்சிபுரம் வழியாக நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு வந்தடைந்தனர்.

இந்த சாகச பயணத்தின் ஒரு பகுதியாக மேற்படி ராணுவ வீரர்களின் ராட்சத பலூனில் தாழ்வாக வந்து செல்லும் நிகழ்ச்சி பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெறுவதாக முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக விளையாட்டு அரங்கிற்கு நேற்று மாலை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கூடினர். அதற்காக விளையாட்டு அரங்கம் பாதுகாப்பு வசதியுடன் தயார் நிலையில் இருந்தது.

ஆனால் விழுப்புரம் மாவட்ட செஞ்சியில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு ராட்சத பலூனில் புறப்பட்ட ராணுவ வீரர்கள் விருத்தாச்சலம் பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு வரும் போது பலத்த காற்று வீசியதால் காட்டு பகுதிக்கு, பலூன் இடம்பெயர்ந்ததால், உடனடியாக அவசர அவசரமாக அதே பகுதியில் உள்ள ஒரு கிராமப்பகுதியில் திறந்த வெளியில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ வீரர்கள் பலூனை மடித்து கொண்டு வாகனத்தில் பெரம்பலூருக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிக்காக 77 ஆயிரம் கனஅடி கொண்ட ஒரு ராட்சத பலூனில் 3 ராணுவ வீரர்களும், 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட ராட்சத பலூனில் 4 பேரும் ஏறி தரைத்தளத்தில் இருந்து சுமார் 150 அடி உயரத்திற்கு அந்தரத்தில் பறக்க விடுவதற்காக ராட்சத பலூன்களை தயார்படுத்தி கொண்டிருந்தனர். 4 கிலோ மீட்டர் வேகத்தில் தரைத்தளத்தில் காற்று அடித்தால் தான் ராட்சத பலூனை தரைத்தளத்தில் இருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு பறக்க விட முடியும்.

ஆனால் அப்போது 16 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் அளவுக்கு பலத்த காற்று வீசியதால் சுமார் 1 மணி நேரம் போராடியும் ராட்சத பலூன்களை ராணுவ வீரர்களால் தரைத்தளத்தில் இருந்து மேலே எழுப்ப முடியவில்லை. காற்று அதிகமாக வீசியதால் பறக்க விட முயன்ற 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட பலூனின் உதிரிபாகங்கள் உடைந்து விட்டன. இதனால் அந்த பலூனை ராணுவ வீரர்கள் மடித்து ஓரம் கட்டினர்.

பின்னர் மீதமுள்ள 77 ஆயிரம் கனஅடி கொண்ட ராட்சத பலூனை பறக்க வைக்க நீண்ட நேரம் போராடினர். ஒரு வழியாக ஹீலியம், ஹைட்ரஜன் வாயுக்களை நிரப்பி ராட்சத பலூனை தரைத்தளத்தில் இருந்து 3 வீரர்களுடன் ராணுவ வீரர்கள் மேல் எழுப்பினர். 150 அடி உயரத்தில் பறந்து காட்டுவோம் என்ற ராணுவ வீரர்களின் வாக்குறுதியை இயற்கை பொய்யாக்கி பலத்த காற்று வீசியதால் சுமார் 6 அடி உயரத்திற்கு மட்டுமே பலூன் தரைத்தளத்தில் இருந்து பறக்க விடப்பட்டு 10 நிமிடமே ராணுவ வீரர்கள் சாகசம் செய்து காண்பித்தனர். இதனை மாவட்ட கலெக்டர் சாந்தா மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார், தேசிய மாணவர் படையினர், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசம் செய்யும் போது, அதனை கண்டுகளித்தவர்கள் நிறைய பேர் தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டதை காண முடிந்தது. முன்னதாக ராணுவ வீரர்களை கலெக்டர் சாந்தா வரவேற்று வாழ்த்தினார், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.'

இந்த சாகச பயணமானது வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமாரி வரையில் ஒன்றுபட்ட இந்தியா என்பதை உணர்த்தும் வகையிலும், இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் அதிகமாக சேர்ப்பது போருக்காகவும், எல்லைக் காவலுக்காகவும் மட்டுமல்ல, சாதனையாளர்களை அடையாளம் காட்டவும் தான் என்பதை உணர்த்தவே ஜெய்பாரத் என்கிற இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் ஆகாயத்தில் 14 ஆயிரம் அடி உயரம் பறந்து செல்லும் சாகச பயணம் இந்தியாவில் முதன்முறையாக மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது என்று இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத் தெரிவித்தார்.

பெரம்பலூரில் விளையாட்டு அரங்கில் இருந்து இன்று (சனிக் கிழமை) காலை 7.30 மணியளவில் ஜெய்பாரத் என்கிற ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் புறப்படவுள்ளனர். இதையடுத்து சுமார் 1 மணிநேர பயணத்தில் திருச்சியை சென்றடைய உள்ளனர். அங்கு அண்ணா விளையாட்டரங்கில் ராட்சத பலூனில் சாகச நிகழ்ச்சியை முடித்து கொண்டு வருகிற 24-ந் தேதி ராணுவ வீரர்கள் மதுரைக்கு புறப்படுகின்றனர். பின்னர் சிவகாசி, நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு 29-ந் தேதி சென்றடைந்து ராட்சத பலூனில் சாகச பயணத்தை முடித்துக்கொள்கின்றனர்.

இந்த ராட்சத பலூன் சாகச பயணத்தில் 33 ராணுவ வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இடம் பெற்றுள்ளனர். திருச்சியை சேர்ந்த ஜெயக்குமார், தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த கோபிநாத், வேலூரை சேர்ந்த பழனி ஆகிய 3 ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஒரு பெண் ராணுவ வீராங்கனையான வட மாநிலத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Next Story