நள்ளிரவில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகை திருட்டு


நள்ளிரவில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 22 Dec 2018 3:45 AM IST (Updated: 22 Dec 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி,


நீலகிரி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது குறைந்து இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள், மஞ்சூர், எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கூட்டுறவு வங்கிகளிலும் திருட முயற்சி நடந்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி நகரின் முக்கிய பகுதியான காபிஹவுஸ் ரவுண்டானாவில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணம் திருட முயன்று உள்ளார்.

ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியை சேர்ந்தவர் காஜா. இவர் தனியார் பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால், காஜா தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகை, ரூ.4 ஆயிரம் பணத்தை திருடினர்.

தொடர்ந்து ஊட்டி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் ரபீக் என்பவரது வர்க்கி குடோன் பூட்டை உடைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் முடியாததால் காஜாவின் வீட்டில் திருடிய நகை, பணத்துடன் தப்பி சென்று விட்டனர். நேற்று காலையில் காஜாவின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ஊட்டி நகர மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் பீரோவில் இருந்த துணிகள் ஆங்காங்கே கீழே சிதறி கிடந்தன.

பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டது. இந்த துணிகர சம்பவம் குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஊட்டியில் இரவில் கடுங்குளிர் நிலவுவதால் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் பூட்டப்பட்ட வீடுகளை கண்டறிந்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் இரவு ரோந்தில் ஈடுபடுவது குறைந்து உள்ளதால், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

Next Story