செஞ்சிக்கோட்டை மதில்சுவர்கள் பாதிக்காத வகையில் கடந்து செல்ல பிரமாண்ட சிலையின் பக்கவாட்டு பகுதி வெட்டி எடுக்கும் பணி தீவிரம்
செஞ்சிக்கோட்டை மதில்சுவர்களை பாதிக்காத வகையில் கடந்து செல்ல ஏதுவாக பிரமாண்ட சிலையின் பக்கவாட்டு பகுதிகளை வெட்டி எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செஞ்சி,
பெங்களூரு ஈஜிபுரம் பகுதியில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அகரக்கோட்டை கிராமத்தில் வடிவமைக்கப்பட்ட 108 அடி உயர பிரமாண்ட கோதண்டராமர் சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரி விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை, தீவனூர் வழியாக கடந்த 18-ந்தேதி செஞ்சியை வந்தடைந்தது. இந்த லாரியை செஞ்சிக்கோட்டை, மேல்களவாய் கூட்டுரோடு, சந்தைமேடு, சிங்கவரம் சாலை, தேசூர்பாட்டை வழியாக பெங்களூரு கொண்டு செல்ல முடிவு செய்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் சாலை அளவீடு செய்யப்பட்டது. அப்போது செஞ்சிக்கோட்டை வழியே சிலையை கொண்டு சென்றால் சாலையின் இருபுறமும் உள்ள கோட்டையின் மதில்சுவர்கள் சேதமாகும் என கூறி சிலையை கொண்டு செல்ல தொல்லியியல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிலையை கொண்டு செல்லும் குழுவினர் கோட்டை மதில்சுவர்கள் பாதிக்கப்பாடாத வகையில் 25 அடி அகலம் கொண்ட கோதண்டராமர் சிலையின் பக்கவாட்டு பகுதிகளை வெட்டி 24 அடியாக குறைத்து கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை முதல் பாறையை வெட்டி எடுக்கும் நவீன எந்திரம் மூலம் கோதண்டராமர் சிலையின் பக்கவாட்டு பகுதிகளை வெட்டி எடுக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சிலையுடன் நிறுத்தப்பட்டுள்ள லாரிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சிலை கொண்டு செல்லும் குழுவினர் கூறுகையில், செஞ்சிக்கோட்டை மதில்சுவர்கள் பாதிக்கப்படாத வகையில் கொண்டு செல்ல சிலையின் அகலத்தை வெட்டி குறைத்து வருகிறோம். இந்த பணிகள் முடிவடைந்ததும் கோதண்டராமர் சிலை செஞ்சியில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வழியாக பெங்களூரு செல்லும் என்று கூறினர்.
Related Tags :
Next Story