நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலையில் காதலன் கைது திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை அறுத்த கொடூரம்


நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலையில் காதலன் கைது திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை அறுத்த கொடூரம்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:00 AM IST (Updated: 22 Dec 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலையில் காதலன் கைது செய்யப்பட்டார்.

இட்டமொழி, 

நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலையில் காதலன் கைது செய்யப்பட்டார். திருமணத்துக்கு மறுத்ததால் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம்பெண் கொடூரக்கொலை

நெல்லை அருகே உள்ள பேட்டை ரகுமத்நகரை சேர்ந்தவர் மதார் மைதீன் (வயது 40). அவருடைய மனைவி செய்யது அலி பாத்திமா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். இவர்களில் மூத்த மகள் ஆஷிகா பர்வீன் (வயது 18) நேற்று முன்தினம் காலையில் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகர் விலக்கில் இருந்து சேரகுளம் செல்லும் சாலையில் கெமிக்கல் கம்பெனி கட்டிட வளாகத்தில் ஆஷிகா பர்வீன் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

பொக்லைன் எந்திர டிரைவர்

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழிக்கப்படவில்லை என தெரியவந்தது. இதனால் எதற்காக ஆஷிகா பர்வீன் கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், நெல்லையை அடுத்த மூன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவலை சேர்ந்த முருகனின் மகனான பொக்லைன் எந்திர டிரைவர் சுந்தர்ராஜ் (20) என்பவர் சம்பவத்தன்று காலையில் ஆஷிகா பர்வீன் வீட்டுக்கு சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சுந்தர்ராஜூம், ஆஷிகா பர்வீனும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் ஆஷிகா பர்வீனுக்கு வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதன் காரணமாக அவரும், சுந்தர்ராஜிடம் பேசுவதையும், பழகுவதையும் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டார். இதனை அறிந்த சுந்தர்ராஜ், தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் வற்புறுத்தினார்.

ஆனால், ஆஷிகா பர்வீன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜ், தன்னுடைய நண்பர்களிடம் இச்சம்பவத்தை கூறி தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்து இருக்கிறார். இதை கேட்ட அவர்கள், நீ எதற்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும். உன்னை ஏமாற்றியவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என அவரிடம் தெரிவித்து உள்ளார்கள்.

கழுத்தை அறுத்து கொலை

இதனால் ஆஷிகா பர்வீனை கொலை செய்ய சுந்தர்ராஜ் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று ஆஷிகா பர்வீன் வீட்டுக்கு சுந்தர்ராஜ் சென்றார். தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை எனில், நாம் காதலித்தபோது ஒன்றாக சுற்றிய புகைப்படங்களை மாப்பிள்ளை வீட்டாரிடம் காட்டி திருமணத்தை நிறுத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷிகா பர்வீன், அவரிடம் சமாதானம் பேசி புகைப்படங்களை கேட்டு கெஞ்சினார்.

உடனே, தன்னுடன் வந்தால் புகைப்படங்களை தருவதாக மிரட்டி மோட்டார்சைக்கிளில் ஆஷிகா பர்வீனை சுந்தர்ராஜ் ஏற்றிச்சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடமான மூலைக்கரைப்பட்டி அருகே கெமிக்கல் கம்பெனி கட்டிட வளாகத்துக்கு அவர்கள் சென்றனர். அங்கு ஆஷிகா பர்வீன், தனது புகைப்படங்களை தருமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆஷிகா பர்வீன் கழுத்தை கொடூரமாக அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் துடித்துடித்து உயிரிழந்தார். பின்னர் சுந்தர்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதையடுத்து சுந்தர்ராஜை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story