ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சத்தை தடுக்க புதிய குழு


ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சத்தை தடுக்க புதிய குழு
x
தினத்தந்தி 22 Dec 2018 4:00 AM IST (Updated: 22 Dec 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அந்த மருத்துவமனையின் ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் 62 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம், ஊழல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவமனை வளாகம் முழுவதும் கண்காணிப்பில் இருக்கும்.

21 கேமராக்கள் மருத்துவமனை வெளி வளாகத்திலும், 104 கேமராக்கள் மருத்துவமனை கட்டிடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. வெளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 280 மீட்டர் வரை பார்க்கக்கூடிய திறன் உடையதாகும். இந்த கண்காணிப்பு கேமராக்கள் இரவு நேரங்களிலும் தெளிவாக படம் பிடிக்கும் வசதிகள் கொண்ட நவீன வகை கேமராக்கள் ஆகும்.

புதிய குழு

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் வகையில் தினமும் 2 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு தினமும் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் ஆய்வு மேற்கொண்டு அவர்களது அறிக்கையை கொடுக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் இருந்து உரிய அறிக்கை வந்தவுடன், அந்த அறிக்கையின் பேரில் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் பலகை

மருத்துவமனை வளாகத்தில் உள்ள மைதானத்தில் புதிதாக வண்டிகள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு செல்பவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கள் வண்டிகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் இந்த புதிய வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் பிரேத பரிசோதனை நிலையத்தில் தான் அதிக புகார்கள் வருகிறது. இதனால் அங்கு தனி தகவல் பலகை வைக்கப்பட்டு, இறந்தவர்கள் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அங்கு எழுதிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் லஞ்சம் கேட்டால் பொது மக்கள் 8939642648 என்ற எண்ணில் எஸ்.எம்.எஸ்(குறுந்தகவல்) மூலமாகவோ அல்லது மருத்துவமனை நிலைய அதிகாரியிடம் புகார் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி மற்றும் மருத்துவமனை நிலைய அதிகாரி டாக்டர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story