ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்துச் சென்று கொள்ளையடித்த சம்பவம்: ரூ.1 கோடி எங்கே? சிக்கிய 6 பேரிடம் விசாரணை ரூ.33 லட்சம் பறிமுதல்-பரபரப்பு தகவல்


ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்துச் சென்று கொள்ளையடித்த சம்பவம்: ரூ.1 கோடி எங்கே? சிக்கிய 6 பேரிடம் விசாரணை ரூ.33 லட்சம் பறிமுதல்-பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 21 Dec 2018 11:00 PM GMT (Updated: 21 Dec 2018 7:41 PM GMT)

ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்து சென்று விபத்து போன்று நாடகமாடி பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதில் ரூ.33 லட்சம் பறிமுதலான நிலையில், ரூ.1½ கோடி எங்கே? என்பது குறித்து 6 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மலட்டாறு விலக்கு ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவில் வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்புவதற்காக வேனில் பணம் கொண்டு செல்லப்பட்டது. அந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் இருந்த பணம் மாயமானதாகவும் தகவல் வெளியானது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் இருந்த பணம் எங்கு விழுந்தது, என்ன ஆனது என தெரியவில்லை என்று அந்த வேனில் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதியில் போலீசார் நள்ளிரவில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பணம் எதுவும் கிடைக்கவில்லை.

வேனில் கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு பெட்டகத்தை பார்த்தபோது அது பூட்டிய நிலையில் இருந்துள்ளதோடு, அதில் ரூ.8லட்சத்து 50 ஆயிரம் மட்டும் இருந்துள்ளது. இதுபற்றி வேனில் சென்ற ஊழியர்கள் கூறும் போது, தாங்கள் மற்ற பணத்தினை பையில் வைத்து கொண்டு வந்ததாகவும், அதனைதான் காணவில்லை என்றும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கு வேனில் வந்த நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து வேனில் இருந்த திருவாடானையை சேர்ந்த அன்பு (வயது28), இளையான்குடி கீழாய்குடியை சேர்ந்த குருபாண்டியன்(22), டிரைவர் சத்திரக்குடி முதலூர் கபிலன்(23), திருப்பாலைக்குடி குண்டத்தூர் வீரபாண்டியன்(54) ஆகியோரை ராமநாதபுரம் அழைத்து வந்து தனித்தனியாக விசாரித்தனர்.

அப்போது டிரைவரான கபிலன், தாங்கள் கூட்டாக சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பு தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு அரசு வங்கி மற்றும் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் வேலையை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் மேற்கண்ட வாகனத்தில் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ.1 கோடியே 85 லட்சமும், தனியார் வங்கியில் இருந்து ரூ.26 லட்சமும் என மொத்தம் ரூ.2 கோடியே 11 லட்சம் எடுத்துக் கொண்டு ஏ.டி.எம்.களில் நிரப்ப ஊழியர்கள் புறப்பட்டனர்.

ராமநாதபுரம் பாரதிநகர், வண்டிக்காரத்தெரு பகுதியிலும், கீழக்கரை, சாயல்குடியிலும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பிவிட்டு முதுகுளத்தூருக்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில் விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு சிறிது தூரத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு திட்டமிட்டுள்ளனர்.

இதன்பின்னர் அதிக வேகத்தில் சென்று மலட்டாறு விலக்கு பகுதியில் கூராங்கோட்டை பகுதியில் திட்டமிட்டபடி வாகனத்தினை கவிழசெய்துள்ளனர். இதில் 4 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் போலீசாருக்கும், நிறுவன அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து நாடகமாடி உள்ளனர்.

இவர்களிடம் நடத்திய மேல் விசாரரணையில், பணத்தினை திட்டமிட்டே காலையிலேயே எடுத்து அதனை ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பணியாற்றி நீக்கப்பட்ட கபிலனின் உறவினரான பரமக்குடி முதலூர் கந்தபாண்டி(28) என்பவரிடம் கொடுத்துவைத்திருந்ததாகவும், அவர் தனது நண்பரான ராமநாதபுரம் நேருநகர் யோகேஷ்(28) என்பவரிடம் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 71 ஆயிரத்தையும், வேனையும் பறிமுதல் செய்தனர்.

அதே நேரத்தில் ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக வாகனத்தில் ரூ.2 கோடியே 11 லட்சம் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ரூ.32 லட்சத்து 71 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் கொண்டு சென்ற வாகன பெட்டகத்தில் ரூ.8½ லட்சம் இருந்துள்ளது. சில ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பி உள்ளனர். கிட்டத்தட்ட மீதம் ரூ.1½ கோடி இருந்திருக்க வேண்டும். அந்த தொகைதான் என்ன ஆனது? என்பது தற்போது விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அதுகுறித்து சிக்கிய 6 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தனியார் நிறுவன ஊழியர்களின் இந்த கூட்டுக் கொள்ளையானது ஒரே நாளில் நடந்திருக்காது என சந்தேகிக்கிறோம். இவர்கள் ஒவ்வொரு நாளும் எடுத்து வரும் பணத்தை ஏ.டி.எம்.களில் நிரப்பாமல், குறிப்பிட்ட தொகையை மட்டும் நிரப்பிவிட்டு மற்ற பணத்தை கையாடல் செய்திருக்கலாம் என தெரியவருகிறது. இப்படியாக லட்சக்கணக்கில் கையாடல் செய்த தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சென்றிருக்கலாம். அந்த கணக்கை வங்கி அதிகாரிகள் கவனித்து, தங்களிடம் கேட்பார்கள் என்பதற்காக அதை நேர் செய்ய இப்படி விபத்து நாடகமாடி பணம் மாயமாகிவிட்டதாக கூறி இருக்கலாம்.

மேலும் விபத்து, கொள்ளை சம்பவங்களின் மூலம் அதிக தொகையை இழந்தால், இன்சூரன்ஸ் மூலம் 60 சதவீத தொகையை திரும்ப பெற்றுவிடலாம் என நினைத்து, வங்கி அதிகாரிகள் தூண்டுதலின் பேரில் இந்த சதிச்செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம்.

எனவே அவர்கள் உண்மையிலேயே ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகையை கொண்டு சென்றார்களா, இல்லை இந்த கொள்ளை திட்டத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story