3-ம் பாலின மசோதாவை கண்டித்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்


3-ம் பாலின மசோதாவை கண்டித்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2018 3:45 AM IST (Updated: 22 Dec 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

3-ம் பாலின மசோதாவை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திருநங்கைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

சமூக நல செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் திருநங்கைகள் சுதா, சுபிக்‌ஷா, அருணா ஆகியோர் சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் சமூக நீதித்துறை மந்திரி தாவர்சந்த் ஹெகலாட், திருநங்கைகளை குற்றவாளியாக சித்தரிக்கும் வகையில் 3-ம் பாலின மசோதாவை கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்தார். இதனை கண்டித்து நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும், அதனை கருத்தில் கொள்ளாமல் கடந்த 17-ந் தேதி நாடாளுமன்றத்தில் 3-ம் பாலின(மாற்று பாலினம்) மசோதா நிறைவேறி இருக்கிறது. இந்த மசோதாவால் திருநங்கை என்று அடையாளம் செய்துகொள்ள மாவட்ட நீதிபதியிடம் விண்ணப்பித்து அடையாள சான்றிதழ் பெற வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே திருநங்கைகள் நலனுக்கு எதிராக அமைந்துள்ள இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து மத்திய அரசின் மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திருநங்கைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.

Next Story