விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மேம்பாலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு வருமா?


விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மேம்பாலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு வருமா?
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 7:57 PM GMT)

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மந்தம் அடைந்துள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பாலத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்.

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால திட்டப்பணி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்துக்குள் திட்டப்பணி முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்குவரும் என நெடுஞ்சாலைத்துறையினர் உறுதி அளித்து இருந்தனர். ஆனாலும் நகராட்சி நிர்வாகம், மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாததால் மேம்பால கட்டுமான பணிகள் அவ்வப்போது முடக்கம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி கடந்த மார்ச் மாதத்துக்குள் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வராத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மேம்பாலத்தின் இருபுறமும் சேவை ரோடு அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ளவர்களிடம் இடம் கேட்பது என முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியால் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், யாரும் இடம் தர முன்வராத நிலையில் தற்போது தான் பாலத்தின் இருபுறமும் அரசு இடத்தில் சேவை ரோடு அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதே போன்று ராமமூர்த்தி ரோட்டின் கிழக்கு பகுதியில் மேம்பாலம் முடிவடையும் இடத்தில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் முரண்பட்ட தகவல்களை கூறி வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இறுதியில் ரூ.2கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்க மதிப்பீடு தயாரித்து அரசிடம் அனுமதி கோரி உள்ளதாக தெரிவித்தனர்.

மேம்பாலம் பயன்பாட்டிற்குவந்தாலும் சுரங்கப்பாதை அமைப்பதில் பிரச்சினை இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கு இடையில் சுரங்கப்பாதை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு 8 வாரங்களுக்குள் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மதிப்பீடு தயாரித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே சுரங்கப்பாதை அமைக்கசாத்தியம் இல்லை என தெரிவித்துவிட்டனர்.

இம்மாதிரியான பிரச்சினைகளால் மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் மந்தநிலையை அடைந்தன. மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகுழாய்களை மாற்றி அமைப்பதற்கு ரூ.56லட்சம் நிதியினை நகராட்சியிடம் இருந்து கடந்த ஆண்டே பெற்றுவிட்டபோதிலும் அந்தப்பணிகளை முழுமையாக முடிக்காத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனாலும் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் அதன் பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே மேம்பாலத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும். ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்பதை முதன்மை காரணமாக கொண்டு தான் மேம்பாலம் கட்டுவதற்கே தீர்மானிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுவரும் நிலையில் மேம்பாலத்தை எவ்வளவு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியுமோ அவ்வளவு வேகமாக கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகும். எனவே நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story