கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 116 பேர் கைது
கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 116 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கிராம நிர்வாக அலுவலகத்தில் மின்சாரம், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும், இணையதளத்தில் சான்றுகளை பதிவேற்றம் செய்ய இணையதள வசதியுடன் கூடிய கணினி வசதி வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் திரண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து சிறிது நேரம் கோஷம் எழுப்பினார்கள். பிறகு திடீரென்று கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயற்சி செய்தனர். உடனே அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் 40 பெண்கள் உள்பட 116 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி கோவையில் உள்ள ஒரு தனியார் மண்டபத் தில் தங்க வைத்தனர். பிறகு அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரஸ்நேவ், செயலாளர் சரவணன், பொருளாளர் சந்திரசேகர், மாவட்ட துணை தலைவர் சத்தியபாமா, கோட்ட செயலாளர்கள் உதயகுமார், ஜோதிபிரகாஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘நாங்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. எனவே அடுத்தகட்ட போராட்டம் குறித்து நிர்வாகிகள் முடிவு செய்து அறிவிப்பார்கள். எங்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்’ என்றனர்.
Related Tags :
Next Story