சிறுபான்மையின மக்கள் அரசின் கடன் உதவி திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் - நல இயக்குனர் பேச்சு
சிறுபான்மையின மக்கள் அரசின் கடன் உதவி திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நல இயக்குனர் வள்ளலார் பேசினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில், சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு சிறுபான்மையினர் நல இயக்குனரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான வள்ளலார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு மூலம் செயல்படுத்தி வரும் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சிறுபான்மையினர் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், சர்ச்சார் குழு பரிந்துரைகளின் படி ஒருங்கிணைந்த பல்நோக்கு சமுதாய மேம்பாட்டு திட்டம், கிறிஸ்தவ தேவாலயங்களின் கட்டிடங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு ஆகிய திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள், உலமாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், சிறுபான்மையின பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சிறுபான்மையின மக்கள் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் திட்டங்கள் முழுமையாக சென்றடைய செய்ய வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 612 உலமாக்கள் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. சர்ச்சார் குழு பரிந்துரையின் படி, நீலகிரி கூடலூர் பகுதியில் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பகுதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. எனவே, அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்னவென்று கண்டறிந்து, அதற்கான முன்மொழிவுகளை அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன்,
சுய உதவிக்குழுவிற்கான கடன், கல்வி கடன், கறவை மாடு வாங்க கடனுதவி, ஆட்டோ வாங்க கடனுதவி போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மக்கள் இந்த திட்டங்களை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருந்து 60 வயது பூர்த்தி அடைந்த 9 பேருக்கு ரூ.1000 தமிழக அரசின் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், 30 பேருக்கு புதுப்பித்தல் செய்யப்பட்ட உலமா அட்டைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் லோகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story