கோவில் பிரசாதம் சாப்பிட்ட 16 பேர் பலி: விசாரணைக்கு அழைத்து சென்றபோது கைதான அம்பிகா ஆர்ப்பாட்டம்
கோவில் பிரசாதம் சாப்பிட்ட 16 பேர் பலியான சம்பவத்தில் கைதாகி உள்ள அம்பிகாவை, நேற்று போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது ஆர்ப்பாட்டம் செய்தார்.
கொள்ளேகால்,
கோவில் பிரசாதம் சாப்பிட்ட 16 பேர் பலியான சம்பவத்தில் கைதாகி உள்ள அம்பிகாவை, நேற்று போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது ஆர்ப்பாட்டம் செய்தார். அவர், "போலீசார் என்னை அடிக்கிறார்கள், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’’ என்று கூச்சலிட்டார்.
சாவு எண்ணிக்கை உயர்வு
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் கடந்த 14-ந் தேதி கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 15 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் பிரசாதம் சாப்பிட்டதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று பலியானார். இதன்மூலம் இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இதுபற்றி ராமாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதும், அதை சாளூர் இளைய மடாதிபதி மகாதேவசாமி, அவருடைய கள்ளக்காதலி அம்பிகா, அவரது கணவர் மாதேஷ் மற்றும் இவர்களுடைய கூட்டாளி தொட்டய்யா ஆகியோர் சேர்ந்து பிரசாதத்தில் கலந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
போலீசார் வீடியோ எடுத்தனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கில் கைதான அம்பிகா, அவருடைய கணவர் மாதேஷ், கூட்டாளி தொட்டய்யா ஆகிய 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சம்பவம் நடந்த மாரம்மா கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் எப்படி பிரசாதத்தில் விஷம் கலந்தார்கள் என்று விசாரித்தனர். அப்போது அம்பிகா உள்பட 3 பேரும் தாங்கள் எவ்வாறு பிரசாதத்தில் விஷம் கலந்தோம் என்பதை போலீசார் முன்பு நடித்துக் காண்பித்தனர். அதை போலீசார் வீடியோ எடுத்தனர்.
அதையடுத்து அங்கிருந்த அம்பிகாவின் வீடு, தொட்டய்யாவின் வீடு ஆகியவற்றில் போலீசார் சோதனை நடத்தினர். ஏனெனில் அங்கு வைத்துதான் அவர்கள் சதித்திட்டத்தை தீட்டி உள்ளனர்.
கற்களை வீசி தாக்க முயற்சி
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு திரண்ட சுலவாடி கிராம மக்கள் அம்பிகா, மாதேஷ் மற்றும் தொட்டய்யா ஆகியோர் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கிராம மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணை அனைத்தும் முடிந்து அம்பிகா உள்பட 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் ராமாபுரா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திடீரென கூச்சலிட்ட அம்பிகா
இந்த நிலையில் நேற்று காலையிலும் போலீசார் அம்பிகா, மாதேஷ், மகாதேவசாமி, தொட்டய்யா ஆகிய 4 பேரையும் மாரம்மா கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ராமாபுரா போலீஸ் நிலையத்தில் இருந்து அவர்கள் 4 பேரையும் அழைத்துக் கொண்டு புறப்பட தயாரானார்கள். அந்த சமயத்தில் அம்பிகா திடீரென கூச்சலிட்டார். அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வேளையில், ‘‘போலீசார் ஏமாற்றுகிறார்கள். போலீசார் மோசம் செய்து விட்டார்கள். போலீசார் தான் விஷ பாட்டில்களை அங்கு கொண்டு வந்து வைத்தார்கள். ஆனால் பிரசாதத்தில் நான்(அம்பிகா) விஷம் கலந்ததாக போலீசார் ஒப்புகொள்ள சொல்கிறார்கள். என்னை அடித்து, உதைத்தும் துன்புறுத்துகிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை’’ என்று சொன்னபடி கத்தினார். மேலும்‘‘நான் வரமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள். இவ்வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும்’’ என்று அவர் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய தடயங்கள்...
இதையடுத்து போலீசார் அம்பிகா உள்பட 4 பேரையும் போலீஸ் நிலையத்தில் இருந்து அவசர, அவசரமாக வேனில் ஏற்றி மாரம்மா கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நேற்றும் 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அம்பிகாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போலீசார் சில முக்கிய தடயங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் ராமாபுரா போலீஸ் நிலை யத்திற்கு அழை த்து வந்தனர்.
Related Tags :
Next Story