ஓட்டல் அதிபரின் உறவினர் கொலை ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை
பழனியில் ஓட்டல் அதிபரின் உறவினரை கொலை செய்த வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு திண்டுக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய உறவினர்கள் கிருஷ்ணமூர்த்தி (வயது 37), கண்ணன் ஆவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் தள்ளுவண்டியில், சிலம்பரசனின் ஓட்டலுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது வழியை மறித்ததாக கூறி கண்ணனை, மதனபுரத்தை சேர்ந்த மாரிமுத்து தாக்கினார்.
இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்துவை கண்டித்தார். இதைத் தொடர்ந்து மாரிமுத்து தனது அண்ணனும் ஆட்டோ டிரைவருமான வெங்கடாசலத்தை அழைத்து கொண்டு சிலம்பரசனின் ஓட்டலுக்கு சென்றார். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வெங்கடாசலம் அரிவாளால் கிருஷ்ணமூர்த்தியை வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடாசலம், மாரிமுத்து ஆகியோர் மீது பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் மாரிமுத்து ஏற்கனவே இறந்து விட்டார். இதற்கிடையே வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மதுரசேகர் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட வெங்கடாசலத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story