ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை தி.மு.க. கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை மு.க.ஸ்டாலின் மீது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு


ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை தி.மு.க. கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை மு.க.ஸ்டாலின் மீது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Dec 2018 3:39 AM IST (Updated: 22 Dec 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை தி.மு.க. கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை என்று மு.க.ஸ்டாலின் மீது டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார்.

திருச்சி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி நீக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் அரசியல் அடாவடி ஊருக்கே தெரியும். ‘அ.தி.மு.க.வை ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்போம்’ என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், இன்று அவரது குடும்பம்தான் அடாவடிகளில் ஈடுபட்டுள்ளது. அவரது தம்பி மட்டுமல்ல, அவரது மகன், சொந்தக்காரர்கள் என அனைவருமே இதுபோன்றுதான் ஈடுபடுகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விரைவில் அ.தி.மு.க.வுடன் இணையும் என்று வதந்தி பரப்புகிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. ஏனென்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில்தான் அ.தி.மு.க.வின் 90 சதவீத தொண்டர்களும் உள்ளனர். இன்னும் அங்கிருக்கும் 10 சதவீத பேரும் விரைவில் எங்களுடன் இணைவார்கள்.

ஆனால், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான 12 பேரை மட்டும் சேர்த்து கொள்ள மாட்டோம். நாங்கள் ஒருபோதும் துரோகிகளுடன் சேரமாட்டோம். ஆட்சி, அதிகாரம் சென்ற பின்னர் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. அனைவரும் இங்கு வந்து விடுவார்கள். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்.

சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதை தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை. மு.க.ஸ்டாலின் ‘மைக்’ கிடைத்ததும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்து பேசிவிட்டார். 40 ஆண்டுகால அனுபவம் உள்ள அவர், இப்படி பேசியது ஆச்சரியம் அளிக்கிறது. அவரது பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.

ஏனென்றால், ராகுல்காந்தியே தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. மு.க.ஸ்டாலினின் இந்த செயல்பாடு, பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி உருவாகி விடக்கூடாது என்பதற்காக பாரதீய ஜனதாவுக்கு உதவி செய்வதுபோல உள்ளது. இதன் மூலம் ராகுல்காந்திக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டார். 1996-ம் ஆண்டு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது. 1999-ம் ஆண்டு பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து மத்திய மந்திரி சபையிலும் பங்கு வகித்தனர். 2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியை கழற்றி விட்டு, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தனர். 2009-ம் ஆண்டு மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து மந்திரி சபையில் இடம் பிடித்தனர். அதன் பின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசை கழற்றி விட்டார்கள். மு.க.ஸ்டாலினின் செயல்பாடு இப்போதும் அப்படிதான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story