மதுரையில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும்’ - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
மதுரையில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை,
மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமான பணிகளை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் நடராஜன், அரசு ஆஸ்பத்திரி டீன்(பொறுப்பு) சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது:-
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 16 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய இருக்கிறது. இதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம், மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் அதிகரிக்கப்படும். இதுபோல், எய்ம்ஸ் மருத்துவமனையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கான ஆராய்ச்சி மையமும் செயல்பட உள்ளது. நர்சுகள், அலுவலர்களுக்கான குடியிருப்புகளும் அமைக்கப்பட இருக்கிறது. அறுவை சிகிச்சை அரங்கம், மருத்துவ ஆராய்ச்சி மையம் போன்ற வசதிகள் இடம் பெறுகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு மேல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. முதல்-அமைச்சர் அனுமதியுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், கட்டிடப்பணிகள் முடிவடைவதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டது. நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட வேண்டும்“ என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு கருத்து கூற முடியாது என்றார்.
இதைதொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டுக்கு சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கினார்.
Related Tags :
Next Story