காரைக்கால் ஜிப்மர் கிளையில் 839 பதவிகளை நிரப்ப மத்திய நிதி அமைச்சகம் அனுமதி கோகுலகிருஷ்ணன் எம்.பி. தகவல்


காரைக்கால் ஜிப்மர் கிளையில் 839 பதவிகளை நிரப்ப மத்திய நிதி அமைச்சகம் அனுமதி கோகுலகிருஷ்ணன் எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:12 AM IST (Updated: 22 Dec 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் ஜிப்மர் கிளையில் 839 பதவிகளை நிரப்ப மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக கோகுலகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. கோகுல கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புகழ்பெற்ற மருத்துவ முன்னோடி நிறுவனமான ஜிப்மர் தென்கிழக்கு ஆசியாவின் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியான காரைக்கால் மக்களின் நெடுநாள் கோரிக்கைக்கு இணங்கி மத்திய அரசானது ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் கிளையை 2016-17ல் ஆரம்பித்தது. காரைக்காலுக்கு மட்டுமல்லாது அதை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்ட மக்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் அந்த கல்லூரிக்கு தேவையான பேராசிரியர்களும், நிர்வாக ஊழியர்களும் முறையாக நியமிக்கப்படவில்லை. தற்காலிக பணியாளர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகிறார்கள்.

ஜிப்மர் தரப்பில் 336 ஆசிரியர் பதவிகளுக்கும், 1,683 நிர்வாக பதவிகளுக்கும் நியமனம் செய்து கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதுகுறித்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்பினேன்.

அத்துடன் டெல்லியில் நலத்துறை, நிதித்துறை அதிகாரிகளையும் தனித்தனியாக சந்தித்து அந்த கோப்புக்கு உரிய அனுமதிகோரி வலியுறுத்தினேன். அதன்விளைவாக மத்திய நிதி அமைச்சகம் மொத்தம் 839 பதவிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த 839 பதவிகளில் 141 ஆசிரியர் பதவி மற்றும் 698 நிர்வாக பதவிகளும் அடங்கும். இதன்மூலம் வரும் கல்வியாண்டில் காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி முழுமையாக இயங்க இருந்த தடை நீங்கியது. ஜிப்மர் நிர்வாகம் இப்பதவிகளை நிரப்புவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மத்திய சுகாதாரத்துறையும் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தற்காலிக ஏற்பாடாக 3 பருவ மாணவர்களையும் ஒட்டுமொத்தமாக புதுவைக்கு இடமாற்றம் செய்வதற்கு கடந்த கல்விக்குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் வரும் 2019-20-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது மிகவும் அதிர்ச்சியான செய்தியாகும்.

காரைக்கால் மக்களின் கனவு திட்டமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் கிளை தொடர்ந்து இயங்காத நிலை ஏற்பட்டால் அந்த மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைவார்கள். மத்திய சுகாதாரத்துறையின் நிர்வாக குறைபாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காரைக்காலுக்கு தேவையான ஆசிரியர் பதவிகளுக்கும், நிர்வாக பதவிகளுக்கும் விரைந்து அனுமதி கொடுக்க மத்திய சுகாதார மந்திரி இதில் நேரடியாக தலையிட்டு நிவாரணம் காணவேண்டும். இவ்வாறு அதில் கோகுலகிருஷ்ணன் எம்.பி. கூறியுள்ளார்.

Next Story