நாக்பூர் கோர்ட்டு அருகே பயங்கரம் வக்கீலை கோடரியால் வெட்டிவிட்டு, வாலிபர் தற்கொலை
நாக்பூர் மாவட்ட கோர்ட்டு அருகே வக்கீல் ஒருவரை கோடரியால் வெட்டிவிட்டு வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாக்பூர்,
நாக்பூர் மாவட்ட கோர்ட்டு அருகே வக்கீல் ஒருவரை கோடரியால் வெட்டிவிட்டு வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வக்கீல்
நாக்பூர் மாவட்டத்தில் மூத்த வக்கீல்களில் ஒருவராக பணியாற்றி வருபவர் சதானந்த் நர்னாவ்ரே(வயது 62). இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார்.
அவர் கோர்ட்டை விட்டு வெளியே வந்து சாலையின் நடைபாதையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கோடரியால் வக்கீலை சரமாரியாக வெட்டினார்.
இதில் சதானந்த் நர்னாவ்ரே படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த வாலிபர் தான் வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
வாலிபர் சாவு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மயோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் விஷம் குடித்த வாலிபர் இறந்துபோனது தெரியவந்தது.
படுகாயம் அடைந்த வக்கீல் சதானந்த் நர்னாவ்ரேவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் வக்கீலை தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் லோகேஷ் பாஸ்கர்(31) என்பது தெரியவந்தது. இருப்பினும் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story