சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மரணம் தலைவர்கள் இரங்கல்


சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மரணம் தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:32 AM IST (Updated: 22 Dec 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

சாகித்ய அகாடமி விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73). லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபஞ்சன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை 11.30 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபஞ்சன் மரணமடைந்தார்.

பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம் என்பதாகும். இவர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். பெற்றோர் சாரங்கபாணி-அம்புஜம்மாள். பள்ளிப்படிப்பினை புதுச்சேரியில் முடித்த அவர் தமிழ் வித்வான் படிப்பினை கரந்தை கல்லூரியில் படித்தார். தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

எழுத்தார்வம் மிக்க அவர் பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றி உள்ளார். 46 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது ‘வானம் வசப்படும்’ என்ற புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. தமிழர்தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதினையும் பெற்றவர்.

இவரது மனைவி பிரமிளா ராணி கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு கவுதமன், கவுரிசங்கர், சதீஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் 2 பேர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் வரவேண்டியது இருப்பதால் பிரபஞ்சனின் இறுதிசடங்குகள் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த தமிழ் எழுத்தாளரான பிரபஞ்சன் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். புதுச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சன் தனது தனித்துவமான தமிழ் நடையால், பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்குக் கொண்டுசென்று, பல்லாயிரம் வாசகர்களை மகிழ்வித்த பெரும் படைப்பாளியாகத் திகழ்ந்தவர்.

திராவிட இயக்கத்தை நட்புமுரணுடன் அணுகிய எழுத்தாளர் பிரபஞ்சன் அரசியல் ரீதியாக சில விமர்சனங்களை முன்வைத்தபோதும், கருணாநிதியிடம் தனிப்பட்ட அன்பு கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய வாசகர்களுக்கும் தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழுக்கென்றே தன்னைத் தயாரித்துக்கொண்டவர். எழுத்தெண்ணித் தமிழ்படித்துக் கரந்தைக் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர். புலவர் பட்டம் என்ற வட்டம் பல பேரால் தாண்டவியலாதது. அதைத்தாண்டி நவீன இலக்கியத்திற்காகத் தன்னை வார்த்துக்கொண்டவர். நா.பார்த்தசாரதிக்கு பிறகு பண்டித மரபு தாண்டிப் படைப்பிலக்கியத்திற்கு வந்தவர் பிரபஞ்சன். கள்ளுக்கடை வைத்திருந்த தந்தைக்குப் பிறந்தவர் கவிதைக்கடை வைத்ததுதான் இலக்கிய ஆச்சரியம். சமரசம் இல்லாத படைப்பாளி.

இருக்கும்போது செத்துச் செத்து, இறந்தபின் வாழ்கிறவன்தான் எழுத்தாளன். அதே நம்பிக்கையில் 73 வயது வரையில் இயங்கி வந்த பிரபஞ்சன் இதோ இப்போது இறந்துவிட்டார்; அவரது எழுத்து வாழப்போகிறது. மறதி அதிகமிக்க மகாயுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் எழுத்தாளனையாவது நீண்ட காலம் நெஞ்சில் நிறுத்துவோம். அவரை இழந்து வாடும் உறவுகளுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் உள்பட பலரும் பிரபஞ்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story