தாராபுரத்தில் வாகன சோதனையின் போது 1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் சிக்கியது - 2 பேர் கைது; திடுக்கிடும் தகவல்கள்
தாராபுரத்தில் வாகன சோதனையின் போது 1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திடுக்கிடும் தகவர்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களையும், அங்கிருந்து வரும் வாகனங்களையும் சோதனை செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று ஒட்டன்சத்திரம் சாலையில் இருந்து தாராபுரம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.
அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினார்கள். ஆனால் காரை ஓட்டிவந்த நபர் போலீசாரை கண்டதும், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த காரை தங்களது வாகனத்தில் துரத்திச் சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 2 பேர், காரின் கதவை திறந்து கொண்டு, கீழே குதித்து தப்பி ஓட முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் போலீசார், அந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரின் டிக்கியில் ஒரு பெரிய பை இருந்தது. அந்த பையில் கத்தை கத்தையாக செல்லாத 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காரில் வந்த இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ஒருவர் பிரதீஸ்ராஜ் (வயது 36), கோவை ஆவாரம்பாளைத்தை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் கலைச்செல்வன் (33), கோவை கணபதி கே.ஆர்.ஜி. நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் பையில் இருந்த செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள் 45 லட்சமும், 500 ரூபாய் நோட்டுகள் 55 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடி இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை எங்கே கொண்டு சென்றனர் என்று போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-
பிரதீஸ்ராஜூம், கலைச்செல்வனும் நண்பர்கள். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனித்தனியே வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேருக்கும் மற்றொரு நண்பர் மூலமாக, கோவை கிராஸ்கட் ரோட்டை சேர்ந்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளரான தண்டபாணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டபாணி செல்போன் மூலம் பிரதீஸ்ராஜையும், கலைச்செல்வனையும் தொடர்பு கொண்டு, “ செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் 1 கோடி தருவதாகவும், அந்த நோட்டுகளை யாருக்கும் தெரியாமல் காரில் மதுரைக்கு எடுத்து செல்ல வேண்டும். அங்கு உங்களை ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுவார். அவர், தெரிவிக்கின்ற வங்கிக்கு சென்று, அங்குள்ள அதிகாரியிடம், 1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுங்கள். அவர் உங்களிடம் புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு வாருங்கள். இந்த காரியத்தை சரியாக செய்துவிட்டால், உங்களுக்கு இந்த பணத்தில் 10 சதவீதம் கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.
பணத்திற்கு ஆசைப்பட்ட பிரதீஸ்ராஜூம், கலைச்செல்வனும், கிராஸ் கட்ரோட்டில் உள்ள தண்டபாணியிடம் சென்று, செல்லாத 1000 ரூபாய் நோட்டுகளில் 45 லட்சமும், செல்லாத 500 ரூபாய் நோட்டுகளில் 55 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடிக்கான நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு, காரில் மதுரைக்கு சென்றுள்ளனர். அங்கு காத்திருந்தும் யாரும் இவர்களை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் காத்திருந்து, காத்திருந்து வெறுத்துப்போன இவர்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.
அப்போது தண்டபாணி இவர்களை தொடர்பு கொண்டு, மதுரையில் நிலைமை சரியில்லை. எனவே நீங்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு, கோவைக்கு திரும்பி வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அதையடுத்து பிரதீஸ்ராஜும், கலைச்செல்வனும் செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் காரில் மதுரையிலிருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது, தாராபுரத்தில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.இதையடுத்து போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து, 1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவையை சேர்ந்த தண்டபாணி யார்? மதுரையில் எந்த வங்கியில், எந்த அதிகாரிகளை சந்திக்க சென்றார்கள் என்பது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாராபுரத்தில் 1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8.11.2016 அன்று இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தவர்கள் அதை மாற்ற வங்கிகளுக்கு படைஎடுத்தனர். மேலும் 31.3.2017 -க்கு பிறகு செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுளை வைத்து இருப்பது குற்றமாக கருதப்படும் மத்திய அரசு கூறியநிலையில், இவர்கள் 1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தது எப்படி? 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்னும் செல்லாத ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்து கொண்டு செல்ல காரணம் என்ன? என்று போலீசார் விசாரித்து வருகிறர்கள்.
Related Tags :
Next Story