ஆம்பூர் நகராட்சியில் குடிநீர், சாலை பணிகளை 10 நாளில் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு


ஆம்பூர் நகராட்சியில் குடிநீர், சாலை பணிகளை 10 நாளில் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 23 Dec 2018 4:00 AM IST (Updated: 22 Dec 2018 7:04 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் நகராட்சியில் குடிநீர், சாலைபணிகளை 10 நாளில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கம்பிக்கொல்லை பகுதியில் ரூ.88¾ லட்சத்திலும், வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ரூ.55½ லட்சத்தில் பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் குடிநீர் வினியோகத்திற்காக ரூ.50 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக குழாய்கள் பதித்தல், மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஆம்பூர் நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், மேற்கொள்ள வேண்டி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், கலெக்டர் ராமன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

வேலூர் மண்டல நகராட்சிகள் நிர்வாக ஆணையாளர் விஜயகுமார், ஆணையாளர் பார்த்தசாரதி, தாசில்தார் சுஜாதா, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.மதியழகன், அரசு வக்கீல் டில்லிபாபு, நகராட்சி பொறியாளர் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுந்தரம், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் நஜர்முஹமது மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி, ஆம்பூர் நகராட்சியில் குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். குறிப்பாக குடிநீர் பிரச்சினை இருக்கவே கூடாது. சாலை மற்றும் குடிநீர் பணிகளை வருகிற 10 நாட்களில் முடிக்க வேண்டும். ஆம்பூரில் நடந்து வரும் பணிகள் ஆய்வு செய்ய அமைச்சர் நிலோபர்கபிலை முதல்–அமைச்சர் நியமித்துள்ளார். அதனால் அனைத்து பணிகளும் வேகமாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் ராமனிடம் கேட்டபோது, ஆம்பூரில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்பூரில் 15 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் தமிழ்நாடு அரசின் நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக 3 குழுக்கள் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 3 குழுக்களும் இந்த பணிக்காக ஆம்பூர் வர உள்ளனர் என்றார்.


Next Story