மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராகவே செயல்படுகிறது கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு
மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராகவே செயல்படுகிறது என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்தியூர்,
அந்தியூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காவிரியிலும், பவானியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் தற்போது வரை கொங்கு மண்டலம் முழுவதும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலம் நிலத்தடி நீர் மேம்பட்டு இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று கொண்டுதான் இருக்கிறது. இதனால் குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் பிரச்சினை வராத வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியினர் தோற்றனர். இதனை அவர்களும் தற்போது உணர்ந்திருக்கின்றனர்.
விவசாயிகளை வாழ வைக்கின்ற வகையில் எந்த ஒரு முயற்சியும் மத்திய அரசு எடுக்காதது வேதனை அளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு அறிவிக்காமல் இருக்கிறது.
மேகதாது அணையைப்போல் கேரளாவில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான அரசாகவே செயல்படுகிறது என்பதை உணரலாம். எனவே விவசாயிகளை வாழ வைத்து தமிழகம் பயன்பெறும் வகையிலும் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் மிக குறைவான வாக்குகளையே பெறும்.
ராகுல் காந்தி அடுத்த பிரதமராக மு.க.ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு இருக்கிறார். இந்த முடிவுக்கு நாங்கள் கூட்டணி கட்சி என்ற வகையில் ஆதரவு அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story