தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்


தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2018 11:00 PM GMT (Updated: 22 Dec 2018 4:07 PM GMT)

பரக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குவதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

கருங்கல், 

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளது. ஆற்றில் இருந்து மணல் அள்ளியதாலும், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பயன்பாட்டிற்காக அந்த பகுதியில் ஆற்றை ஆழப்படுத்தியதாலும் கடல் நீர் நேரடியாக ஆற்றுக்குள் புகுந்து உப்பு நீராக மாறியுள்ளது.

இதனால், ஆற்றுப் படுகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகளின் தண்ணீர் உப்பு நீராக மாறியுள்ளது. இந்த நீரை நேரடியாக பொதுமக்களுக்கு வழங்குவதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உப்பு நீரையே குடிநீராக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் நிலத்தடி நீர் மாசு படுவதால் பல ஏக்கர் பரப்பில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குடிநீர் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்க குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதுதொடர்பாக, பல கட்ட போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நான் (ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ) தடுப்பணையின் அவசியம் குறித்து எடுத்து கூறினேன். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்.

தடுப்பணைக்கான இடம் ஆய்வு, நிர்வாக அனுமதி, விரிவான திட்ட அறிக்கை பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) பரக்காணியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story