பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு


பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Dec 2018 4:30 AM IST (Updated: 22 Dec 2018 9:42 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 11 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் ரகுபதி. இவருடைய மனைவி ரூபா (வயது 33). இவர் நேற்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் உங்களது கணவருக்கு நேரம் சரி இல்லை. இதனால் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று ரூபாவிடம் கூறினர். இதனால் அவர், அந்த ஆசாமிகளை வீட்டுக்குள் அழைத்து சென்றார்.

அந்த ஆசாமிகள் மஞ்சள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து அதன் அருகில் ரூபாவை அமர வைத்தனர். அப்போது ரூபா தலை மீது அந்த ஆசாமிகள் தண்ணீர் தெளித்துள்ளனர். பின்னர் பூஜை நடத்தும் போது கழுத்தில் நகை அணியக்கூடாது என்று அந்த ஆசாமிகள் கூறி உள்ளனர். இதையடுத்து ரூபா கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் நகை, 2 பவுன் தாலிக்கொடி என மொத்தம் 11 பவுன் நகையை கழட்டி அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார்.

இதனை வாங்கிய அந்த ஆசாமிகள் ஒரு பேப்பரில் வைத்து பூஜை செய்யும் இடத்தில் வைத்தனர். பூஜை முடிந்த பின்னர் அந்த ஆசாமிகள் குளித்து விட்டு வந்து நகையை அணிந்து கொள்ளுமாறு கூறினர். பின்னர் அந்த ஆசாமிகள் சென்ற பிறகு ரூபா குளித்து விட்டு நகையை அணிய நகை வைத்த பேப்பர் பொட்டலத்தை பிரித்துள்ளார். அப்போது அதில் 5 கற்கள் இருப்பதும், நகையை அந்த ஆசாமிகள் அபேஸ் செய்து சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து ரூபா பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பென்னாகரம் பகுதியில் தொடர் திருட்டு நடந்து வரும் இந்த சமயத்தில் பெண்ணிடம் பரிகார பூஜை செய்வதாக கூறி 11 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் அபேஸ் செய்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story