புதுக்கோட்டை பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்


புதுக்கோட்டை பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 22 Dec 2018 5:13 PM GMT)

புதுக்கோட்டை பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் போன்றவை சாய்ந்தன. இதனால் நகராட்சி பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மீட்பு பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, பொது மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் புயலின்போது பெய்த மழை மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளியப்பா நகரில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இந்த மழைநீரில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீரும், மழைநீருடன் கலந்து சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்பவர்கள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள மக்களை கடிப்பதால், அவர்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, வள்ளியப்பா நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, கொசு மருந்து அடிக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story