நாமக்கல் அருகே 20 பேரை துரத்தி கடித்த வெறிநாய்
நாமக்கல் அருகே 20 பேரை வெறிநாய் துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோகனூர்,
நாமக்கல் அருகே உள்ளது வளையப்பட்டி. இங்குள்ள வள்ளுவர் நகருக்குள் நேற்று முன்தினம் இரவு வெறிநாய் ஒன்று புகுந்தது. திடீரென அந்த நாய் வீதியில் நடந்து சென்றவர்கள், அங்கு கூட்டமாக அமர்ந்து பேசி கொண்டு இருந்தவர்களை விரட்டி, விரட்டி கடித்தது. சந்தையில் காய்கறி விற்பனை செய்ய வந்தவர்களையும் கடித்தது.
இதில் பாலசுப்பிரமணி (வயது 56), கார்த்திக் (29), மணிகண்டன் (37), வடிவேலு (45), துர்கா (27), குழந்தைவேல் (70), தங்கராஜூ (42) உள்பட மொத்தம் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
20 பேரை வெறிநாய் கடித்ததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீப்பந்தம் மற்றும் தடியுடன் இரவு முழுவதும் அந்த வெறிநாயை தேடினர்.இருப்பினும் அது தப்பியோடி விட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் ஊருக்குள் வந்த அந்த வெறிநாயை பொதுமக்கள் தடியால் அடித்து கொன்றுவிட்டனர். இதற்கு பிறகு தான் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே வள்ளுவர்நகர் பகுதியில் சுற்றி திரிந்த 4 தெருநாய்களையும் அந்த வெறிநாய் கடித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஒரே நாளில் வெறிநாய் 20 பேரை துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story