மாவட்டம் முழுவதும் பாலில் கலப்படத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு 28 உணவு மாதிரிகள் சேகரிப்பு


மாவட்டம் முழுவதும் பாலில் கலப்படத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு 28 உணவு மாதிரிகள் சேகரிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 22 Dec 2018 5:33 PM GMT)

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பாலில் கலப்படத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி 28 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல், 

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பாலில் கலப்படம் செய்யும் நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் அதிகாரிகள் பால் விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் கடந்த ஒரு வாரகாலமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வு நகராட்சி, ஒன்றியம் என மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 28 உணவு மாதிரிகளை எடுத்துள்ள அதிகாரிகள் சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அவற்றை அனுப்பி உள்ளனர். அவற்றின் அறிக்கை கிடைத்தபிறகு பாலில் கலப்படம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தரம் குறைவான பால் விற்பனை செய்ததாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 6 வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story