சேலம் குழந்தை ஏசு பேராலயத்தில் 4 உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சேலம் குழந்தை ஏசு பேராலயத்தில் 4 உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் 4 ரோட்டில் குழந்தை ஏசு பேராலயம் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 4 உண்டியல்கள் உள்ளன. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இந்த ஆலயத்தை சுற்றிலும் பாதுகாப்பிற்காக 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆலயத்தில் அலங்கார பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆலயத்துக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை உள்ள ஜன்னலில் 2 கம்பிகளை அறுத்து, அதன் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் மெயின் பிளக்கை எடுத்து செயலிழக்க வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாதிரியார் பங்களாவின் அருகிலேயே செயல்பட்டு வரும் புத்தக நிலையத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த பெட்டியை மர்ம நபர்கள் திறந்து பணத்தை எடுத்தனர். இதையடுத்து ஆலய பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்த மர்ம நபர்கள் கம்பிகளின் இடைவெளியில் உள்ளே நுழைந்து அங்கிருந்த 4 உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர்.
ஆலயத்தின் காவலாளி அதிகாலை 3.30 மணியளவில் வளாகத்தில் ரோந்து சென்றார். அப்போது ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள கேட்டை ஒருவர் தாண்டி குதிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டார். பின்னர் காவலாளி கேட்டின் பூட்டை திறந்து கொண்டு மர்ம நபரை விரட்டி சென்றார். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீசார் ஆலயத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆலயத்தை பற்றி தெரிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். உண்டியல்கள் வழக்கமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எண்ணப்படும்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) உண்டியலில் இருந்த பணத்தை எண்ண இருந்த நிலையில் திட்டமிட்டே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. உண்டியலில் ரூ.50 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என தெரிகிறது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர். போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் சேலத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story