கோவை அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி வனத்துறையினர் விசாரணை
கோவை அருகே உடலில் காயங்களுடன் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர்,
கோவை அருகே உள்ள ஆனைகட்டி-மாங்கரை செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள மத்திமரப்பள்ளம் என்னும் வனப்பகுதியில், உடலில் காயங்களுடன் 3 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. இதனை நேற்று மாலையில் அந்த பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்தனர். உடனே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார், வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த சிறுத்தைப்புலியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதன் பின்னங்கால்களிலும், வயிற்றுப்பகுதியிலும் காயங்கள் இருந்தது தெரியவந்தது. ஆகவே சிறுத்தைப்புலி ஏதேனும் விலங்குடன் ஏற்பட்ட சண்டையில் இறந்ததா? அல்லது சாலையை கடந்தபோது வாகனத்தில் அடிப்பட்டு காயமடைந்து வனப்பகுதிக்கு வந்து இறந்து விட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இறந்து கிடந்த புலியை பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரமாகி விட்டதால் இன்று (நேற்று) பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை. நாளை (இன்று) பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை சிறுத்தைப்புலியின் உடல் அதே இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் சிறுத்தைப்புலி இறப்புக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்றனர்.
Related Tags :
Next Story