சாவு எண்ணிக்கை 17- ஆக உயர்வு: பிரசாதம் சாப்பிட்ட மேலும் ஒருவர் பலி பெண்ணுக்கு கருக்கலைந்த சோகம்
விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்களில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது. இதுபோல பெண் ஒருவருக்கு கருக்கலைந்து உள்ளது.
கொள்ளேகால்,
விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்களில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது. இதுபோல பெண் ஒருவருக்கு கருக்கலைந்து உள்ளது.
கிச்சுகுத்தி மாரம்மா கோவில்
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் கோபுரம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் மைசூரு கே.ஆர்.ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுலவாடி கிராமத்தை சேர்ந்த நாகேஷ்(வயது 45) என்பவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 16 ஆனது.
17 ஆக உயர்வு
இந்த நிலையில் பிரசாதம் சாப்பிட்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மைசூரு தனியார் மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா தொரேசாமி மீடு பகுதியை சேர்ந்த ரங்கன்(வயது 45) என்பவர் நேற்று மதியம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக சாவு எண்ணிக்கை 17- ஆக உயர்ந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருக்கலைந்தது
இந்த நிலையில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு கருவும் கலைந்தது. அதுபற்றி விவரம் வருமாறு:-
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பிதரஹள்ளியை சேர்ந்தவர் சவுந்தர்யா(34). கர்ப்பிணியான இவர் கடந்த வாரம் கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பிரசாதம் சாப்பிட்டார். இதையடுத்து கோவில் வளாகத்தில் மயக்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர்.ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை கணவர் சிகிச்சைக்காக கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்டதால் கரு கலைந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா கதறி அழுதார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story