விழுப்புரத்தில் மழை: சாலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு


விழுப்புரத்தில் மழை: சாலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Dec 2018 4:30 AM IST (Updated: 22 Dec 2018 11:51 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நேற்று திடீரென மழை பெய்தது. அப்போது சாலையில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அந்த வகையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரில் நேற்று மதியம் 12 மணிக்கு மழை பெய்தது. சுமார் 15 நிமிடம் சாரல் மழையாக பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் வளவனூர், உளுந்தூர்பேட்டை பகுதியிலும் மழை பெய்தது.

இந்த நிலையில் விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நேருஜி சாலையில் இருந்து அங்குள்ள நான்குமுனை சந்திப்பு மாதாகோவில் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் காந்தி சிலையில் இருந்து பழையபேருந்து நிலையம் வரை சாலையின் ஒரு பக்கம் மட்டும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் சாலையோரம் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த மின்கம்பம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் சாலையில் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நேற்று பகல் முழுவதும் நகரபகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

Next Story