கல்வராயன்மலை வனப்பகுதியில் 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலை வனப்பகுதியில் 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2018 3:15 AM IST (Updated: 23 Dec 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை வனப்பகுதியில் 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்கு 176 மலைக்கிராமங்கள் உள்ளன. மேலும் இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், நீரோடைகளும் உள்ளன. இந்த நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர் சாராயம் காய்ச்சி விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலம் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க மாவட்ட காவல்துறையினர் சாராயவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கல்வராயன்மலை வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூங்கோதை தலைமையிலான போலீசார், கல்வராயன்மலையில் உள்ள குரும்பலூர், தும்பராம்பட்டு, இந்நாடு, வெங்கோடு ஆகிய வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தும்பராம்பட்டு, குரும்பலூர் ஆகிய வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைபார்த்த போலீசார் அவற்றை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக குரும்பலூர் பகுதியை சேர்ந்த வெள்ளி மகன் முருகன், தும்பராம்பட்டு பகுதியை சேர்ந்த ராமன் மகன் செல்வராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story