2019-ம் ஆண்டில் “தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறும்” மண்டல விழிப்புணர்வு கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் பேச்சு
“2019-ம் ஆண்டில் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறும்“ என்று நெல்லையில் நடந்த மண்டல விழிப்புணர்வு கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் கூறினார்.
நெல்லை,
“2019-ம் ஆண்டில் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறும்“ என்று நெல்லையில் நடந்த மண்டல விழிப்புணர்வு கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் கூறினார்.
விழிப்புணர்வு கூட்டம்
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி கலையரங்கில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வரவேற்று பேசினார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், பேரிடர் மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு திட்ட மண்டல கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் திட்ட விளக்கம் குறித்து பேசினார்கள்.
கடும் நடவடிக்கை
கூட்டத்தில் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-
பிளாஸ்டிக் கழிவுகளால் தமிழகத்தில் மிகப்பெரிய மாசு ஏற்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பைகளை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால் அது மழை நீரை மண்ணுக்குள் நுழைய விடாமல், சேமிக்க விடாமல் தடுக்கிறது. இதனால் ஏராளமான நோய்களும் பரவுகிறது. புற்றுநோய் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
எனவே, வருகிற 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட 34 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 6 மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 1-ந் தேதிக்கு பிறகு அரசின் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
தமிழகத்தில் இப்போதே 60 சதவீதம் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதிக்கு பிறகு முழுமையாக பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிக்கப்படும்.
வெளிநாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இதற்கு செலவு அதிகமாகும். அதை விட அனல் மின் நிலையத்தில் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
எனவே, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பொதுமக்களின் ஆயுட்காலம் குறைகிறது. இதனால் சிலர் சிறுவயதிலேயே மரணம் அடையும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் இல்லா தமிழகம்
பிளாஸ்டிக்கை தடை செய்வதிலும், அதனை முற்றிலும் ஒழிப்பதிலும் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, இதற்கு மீண்டும் காலஅவகாசம் வழங்கப்படமாட்டாது. பொதுமக்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 2019-ம் ஆண்டில் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறும்.
மேலும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு மாற்றுப்பொருட்கள் உற்பத்தி செய்ய, மானியம் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார். அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எந்த விதத்தில் வந்தாலும் தடுக்கப்படும். இதில் உள்ளூர் நிறுவனம், பன்னாட்டு நிறுவனம் என பாரபட்சம் பார்க்கப்படாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), வீரராகவராவ் (ராமநாதபுரம்), சிவஞானம் (விருதுநகர்), விஜிலா சத்யானந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, மனோகரன், அ.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மருத்துவக் கல்லூரி டீன் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர் நன்றி கூறினார்.
மனித சங்கிலி
முன்னதாக வ.உ.சி. மைதானத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் ஜோதி ஓட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வ.உ.சி. மைதானத்தில் இருந்து மருத்துவ கல்லூரி கலையரங்கம் வரை கைகளை பிடித்து மனித சங்கிலியாக நின்றனர். மேலும் பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் கண்காட்சியையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
Related Tags :
Next Story