வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி மாவட்டத்தில் பரவலாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான கஜா புயல், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழைபெய்தது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. ஆனால் கடந்த 5-ந் தேதிக்கு பிறகு மழை இல்லை. பகலில் வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் இருந்து வந்தது. இதனால் குளிர் தாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்குதலுக்கும் ஆளாகினர்.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியது. பின்னர் நேற்று அதிகாலையில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் காலை 10 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. சுமார் 15 நிமிடம் கன மழை பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மேலும் மழைநீர் தேங்கிய சில சாலைகள் சேரும், சகதியுமாக இருந்ததால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். சாலையோர சிறு வியாபாரிகள் கொட்டும் மழையில் குடைபிடித்துக்கொண்டும், மழைக்கோட் அணிந்தபடியும் வியாபாரம் செய்ததை பார்க்க முடிந்தது. கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் குடைபிடித்தபடி சென்றனர்.
அதேபோல் பண்ருட்டி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 1.80 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பில் 1 மில்லி மீட்டர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 0.90 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story