‘அ.ம.மு.க.வுக்கு சென்ற அனைவரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவர்’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
‘அ.ம.மு.க.வுக்கு சென்ற அனைவரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவர்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
நெல்லை,
‘அ.ம.மு.க.வுக்கு சென்ற அனைவரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவர்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் தடை
பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது மாவட்ட கலெக்டர்கள் போட்டி போட்டு பிளாஸ்டிக் தடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். வருகிற 2019-ம் ஆண்டு பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகம் உருவாகும்.
எந்தெந்த வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, அதற்கு மாற்று பொருட்கள் எவை? என்பது குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
அ.தி.மு.க.வில் இணைவார்கள்
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.ம.மு.க.வுக்கு சென்ற அனைவரும் அதிலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பி வருவார்கள். இதுதான் கடந்த கால வரலாறு ஆகும். டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முடிவு எடுப்பார்கள். இப்போதே அங்கு புகைச்சல் ஆரம்பமாகி விட்டது.
இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. இதற்கான பணியை ஏற்கனவே தொடங்கி விட்டோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அ.தி.மு.க. தேர்தல் பணியை தொடங்கி விட்டது. எனவே இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களை சந்திக்க தயாராக உள்ளோம்.
கேபிள் டி.வி. கட்டணம்
கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்துவதாக கூறுவது தவறு. தமிழகத்தில் கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கி, அதனை டிஜிட்டல் மயமாக்கி தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. மேலும் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story