கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் பயணிகள் கோரிக்கை


கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2018 10:00 PM GMT (Updated: 22 Dec 2018 7:52 PM GMT)

கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்பென்னாத்தூர்,

பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக ½ லிட்டர், 1 லிட்டர், 2 லிட்டர் என பாட்டில்கள் மற்றும் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாமர மற்றும் நடுத்தர மக்கள் அதிக விலையில் விற்கப்படும் குடிநீரை வாங்க முடியாமல் இருந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது மலிவு விலையில் அனைத்து தரப்பினரும் வாங்கும் வகையில் ரூ.10-க்கு அம்மா குடிநீர் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது வரை இந்த திட்டம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்திலும் அம்மா குடிநீர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கீழ்பென்னாத்தூரில் எம்.எல்.ஏ. அலுவலகம், தாலுகா அலுவலகம், மார்க்கெட் கமிட்டி, சார் பதிவாளர்அலுவலகம், மாவட்ட கலெக்டரின் பயிற்சி நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகள் உள்பட பல அலுவலகங்கள் உள்ளன. கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் பல்வேறு பணிக்காக கீழ்பென்னாத்தூர் வருகின்றனர்.

வெளிகிராமங்களில் இருந்து வருபவர்கள் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்து தான் பல்வேறு அலுவலகங்களுக்கு செல்ல முடியும். கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், வேலூர், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்த அம்மா குடிநீர் விற்பனையகத்தை திடீரென நேற்று முன்தினம் இரவோடு இரவாக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அதிகாரிகள் திருவண்ணாமலைக்கு எடுத்து சென்றுவிட்டனர்.

நேற்று கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் விற்கப்படாததால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்ட போது உரிய பதில் தெரிவிக்கவில்லை.

எனவே கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் மீண்டும் அம்மா குடிநீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story