மணல் கடத்தல்; 11 பேர் கைது


மணல் கடத்தல்; 11 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2018 1:46 AM IST (Updated: 23 Dec 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த தைப்பாக்கம், மாகரல், காளூர் கிராமம் பாலாற்று படுக்கை பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், மாகரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு ஆகியோர் போலீசாருடன் அந்தந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதிகளில் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையொட்டி, மேல்வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி (வயது 38), சதீஷ்குமார் (28), அரசாணிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் (35), முருகன் (31), குமார் (49) ஆறுமுகம் (45), விச்சாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கடம்பத்தூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீசார் நேற்று முன்தினம் வெண்மனம்புதூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி வந்ததை கண்டறிந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து மணல் கடத்தி வந்த கசவநல்லாத்தூரை சேர்ந்த சாதிக் (20) என்பவரை கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெள்ளவேடு

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீசார் வெள்ளவேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மினிடெம்போவை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் அந்த வண்டியில் இருந்த டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் தலகாஞ்சேரி, புல்லரம்பாக்கம், ராமதண்டலம் போன்ற பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகளையும், ஒரு மினிடெம்போ மற்றும் ஒரு பதிவு எண் இல்லாத டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்தியதாக புல்லரம்பாக்கத்தை சேர்ந்த முனுசாமி (27), கவி (22), வாசு (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story