உரிமம் பெறாமல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது முறையான உரிமம் பெறாமல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேளிக்கை நிகழ்ச்சிகள்
புதுச்சேரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நட்சத்திர ஓட்டல்கள், இதர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தடை செய்யப்பட்ட ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவது குற்றமாகும். புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை விருந்து, மெல்லிசை நிகழ்ச்சிகள் ஆகியவை நுழைவுக்கட்டணம் பெற்று நடத்துவதாக இருந்தால் நகராட்சிகள் சட்டத்தின்படி அவைகளுக்கு உரிமம் பெற வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 7 நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர்(கலால்), சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடமும், தீயணைப்பு துறையிடமும் ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் அந்த சான்றிதழ்களுடன் புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பித்து புதுச்சேரி நகராட்சி, வருவாய் பிரிவு-2ல் உரிம கட்டணம் செலுத்த வேண்டும். வருவாய் பிரிவு-1ல் கேளிக்கை வரியினை செலுத்தி முன்அனுமதி பெற்று பின்னர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
கடும் நடவடிக்கை
அனுமதியின்றி இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுமானால் புதுச்சேரி நகராட்சிகள் சட்டவிதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அத்தகைய நிறுவனங்களின் வணிக உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்வதோ, நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை மீறும் வகையிலோ, பிறர் மனம் புண்படும் வகையிலோ செயல்படுவதோ கூடாது.
நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் புதுவையின் தூய்மையை பாதுகாக்க உதவ வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க புதுச்சேரி நகராட்சி சார்பில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story