விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்: போலீஸ் நிலையத்தில் வாலிபர் சாவு அடித்துக்கொன்றதாக உறவினர்கள் முற்றுகை


விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்: போலீஸ் நிலையத்தில் வாலிபர் சாவு அடித்துக்கொன்றதாக உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Dec 2018 11:30 PM GMT (Updated: 22 Dec 2018 9:06 PM GMT)

விசாரணைக்காக அழைத்துச்சென்ற வாலிபர், போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தார். அவரை போலீசார் அடித்துக்கொன்றதாக கூறி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிராட்வே,

சென்னை பாரிமுனை முத்துமாரி செட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வருபவர் சபீர் பட்னவாலா(வயது 52). இவர், கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோயம்புத்தூர் சென்றுவிட்டு 17-ந் தேதி இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் இருந்த 32 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் சபீர் பட்னவாலா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கடந்த 20-ந் தேதி மண்ணடி ஜீன்ஸ்தெரு பிளாட்பாரம் பகுதியை சேர்ந்த சின்னகுமார் என்பவருடைய மகன் விக்னேஷ்(23), கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் என்பவருடைய மகன் ஜெயகுமார்(22), பிராட்வே செம்புதாஸ் தெரு பிளாட்பாரம் பகுதியை சேர்ந்த அஜித்(19) ஆகிய 3 பேரையும் போலீசார், சந்தேகத்தின்பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வந்தனர். இவர்களில் ஜெயகுமார், கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.

இதில் அஜித், மீது ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருட்டு நடந்த வீட்டில் பதிவு செய்யப்பட்ட கைரேகைகளும், பிடிபட்ட 3 பேரின் கைரேகைகளும் ஒத்துப்போனதால் போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையத்தில் இருந்த ஜெயகுமார், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, பணியில் இருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெயகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஜெயகுமார் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெயகுமார் இறந்தது தொடர்பாக அவருடைய குடும்பத்தாருக்கு நேற்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயகுமாரின் தந்தை மணிவண்ணன், தாய் வசந்தி மற்றும் உறவினர்கள் எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் வந்தனர். அவர்கள், ஜெயகுமாருக்கு வலிப்பு நோய் பாதிப்பு இல்லை. போலீசார்தான் விசாரணையின்போது அவரை அடித்துக்கொன்று விட்டதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இறந்த ஜெயகுமாருடன் கைது செய்யப்பட்ட விக்னேஷ் மற்றும் அஜித் ஆகியோரின் உறவினர்களும் போலீஸ் நிலையம் வந்து விக்னேசுக்கும், அஜித்துக்கும் என்ன ஆனது?, அவர்களை பார்த்தே ஆகவேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

அப்போது ஜெயகுமாரின் தாய் வசந்தி, “விசாரணைக்கு அழைத்து வந்த என் மகனை போலீசார் அடித்து உதைத்து திருடியதாக ஒப்புக்கொள்ள வைத்து உள்ளனர். நான் பல முறை மகனை பார்க்க வேண்டும் என கேட்டும் என் கண்ணில் மகனை காட்டாமலேயே கொன்றுவிட்டனர். 4 பேர் பெரிய இரும்பு குழாயால் அடித்து உள்ளனர். 4 பேர் சேர்ந்து அடித்தால் என் மகன் எப்படி அடி தாங்குவான். போலீசார்தான் என் மகனை அடித்துக்கொன்றுவிட்டனர்” எனக்கூறி கதறி அழுதார்.

விசாரணைக்கு அழைத்துச்சென்ற வாலிபர் ஜெயகுமார், போலீஸ் நிலையத்தில் இறந்ததை தொடர்ந்து, ஜார்ஜ் டவுன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஆனந்த், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார். மேலும் அவர் தொடர்ந்து விசாரித்து வருகிறார். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை ஜெயகுமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வழக்கு விசாரணையில் இருந்த குற்றவியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் நேற்று காலை உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து நேற்று மாலை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

பிராட்வே எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற வாலிபர், மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story