மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம்


மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2018 11:00 PM GMT (Updated: 22 Dec 2018 9:37 PM GMT)

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு, 

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்திரிசபையில் 2 பேர் நீக்கம்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நேற்று மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. மந்திரிசபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி, சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகிய 2 பேரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, புதிதாக 8 மந்திரிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். ஆனால் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்த 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் ரமேஷ் ஜார்கிகோளியும், சங்கரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதுபோல, ராமலிங்கரெட்டி, எச்.கே.பட்டீல், பி.சி.பட்டீல், அஜய்சிங், நாகேந்திரா, பீமாநாயக், சங்கமேஷ்வர், ரோஷன் பெய்க், கிருஷ்ணப்பா, ரூபா சசிதர் உள்பட பலர் காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கியுள்ளனர். ஆனால் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில், மந்திரி பதவி கிடைக்காததால் ராமலிங்கரெட்டியின் ஆதரவாளர்கள் நேற்று காலையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராமலிங்கரெட்டிக்கு மந்திரி பதவி வழங்கும்படியும், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ராமலிங்கரெட்டிக்கு மந்திரி பதவி வழங்கவில்லை எனில் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.

இதுகுறித்து ராமலிங்கரெட்டியின் மகளும், ஜெயநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான சவுமியா ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது தந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அவர் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்துள்ளார். அவருக்கு மந்திரி பதவி வழங்காதது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. காங்கிரஸ் மேலிட தலைவர்கள், எனது தந்தைக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்றார்.

தற்கொலை முயற்சி

இதுபோல, பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஹாவேரி மாவட்டம் கிரேகெரூரில், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ.வின் வீட்டு முன்பாக உள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு மேலே, அவரது ஆதரவாளர் ஒருவர் வேகமாக ஏறினார். பின்னர் பி.சி.பட்டீலுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும், இல்லையெனில் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அவரை கீழே இறங்கும்படி பி.சி.பட்டீல் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

அதே நேரத்தில் நீர்த்தேக்க தொட்டி மீது ஏறிய போலீசார், பி.சி.பட்டீலின் ஆதரவாளரிடம் சமாதானமாக பேசினார்கள். பின்னர் அவரை பாதுகாப்பாக நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தால் பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ.வின் வீட்டு முன்பு நேற்று காலையில் பரபரப்பு ஏற்பட்டது.

விஷம் குடித்த ஆதரவாளர்

மேலும் கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அஜய்சிங். இவர், முன்னாள் முதல்-மந்திரி தரம்சிங்கின் மகன் ஆவார். இவரும் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்காததால் நேற்று காலையில் ஜேவர்கி மெயின் ரோட்டில் அஜய்சிங்கின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அஜய்சிங்குக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அத்துடன் ஜேவர்கி மெயின் ரோட்டில் டயர்களை போட்டு தீவைத்து எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினா்.

இதற்கிடையில், அஜய்சிங்குக்கு மந்திரி பதவி கிடைக்காததால், அவரது ஆதரவாளரான சிலானி என்பவர் விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக அவர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ. பதவியை...

இந்த நிலையில், மந்திரி பதவி கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ள சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. தன்னுடைய அடுத்தகட்ட முடிவு குறித்து, தொகுதி மக்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அவர்கள் கூறினால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, மாநிலம் முழுவதும் காங்கிரசை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். மந்திரி பதவி கிடைக்காமல் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்திருப்பதுடன், அவர்களது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்திருப்பதால், காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Next Story