5 ஆண்டுக்கு முன்பு நிதி ஒதுக்கியும் விருதுநகர் - சாத்தூர் 4 வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை இல்லை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாராமுகம்


5 ஆண்டுக்கு முன்பு நிதி ஒதுக்கியும் விருதுநகர் - சாத்தூர் 4 வழிச்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை இல்லை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாராமுகம்
x
தினத்தந்தி 22 Dec 2018 9:58 PM GMT (Updated: 22 Dec 2018 9:58 PM GMT)

விருதுநகர்-சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் நடைமேம்பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாராமுகமாகவே உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர்-சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம், சாத்தூர் படந்தால் விலக்கு ஆகிய பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து விபத்துகளை தடுக்க முயற்சித்த போதிலும் விபத்துகள் குறையவில்லை. இதிலும் குறிப்பாக கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு பொதுமக்கள் சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போது விருதுநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த மாணிக்கம்தாகூர், கலெக்டர் அலுவலக வளாகம், படந்தால் விலக்கு அருகே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்போதைய மத்திய மந்திரி ஆனந்த்சர்மாவிடம் வலியுறுத்தியதன் பேரில் நடைமேம்பாலங்கள் அமைக்க தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நடைமேம்பாலங்களுக்கான திட்டப்பணியை தொடங்க கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து நடைமேம்பாலங்களுக்கான திட்டப்பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து இந்த நடைமேம்பாலங்களை கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விருதுநகரில் நடந்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்துக்கு வந்திருந்த போது நடைமேம்பாலங்கள் கட்டப்படாமல் முடக்கம் அடைந்துள்ளதை அவரிடம் முறையிட்ட போது அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகில் நடைமேம்பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அத்துடன் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் திட்டப்பணி முடங்கி விட்டது.

இதனையடுத்து நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று சாலை பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல முறை சுட்டிக்காட்டிய பின்னரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடைமேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் பாராமுகமாகவே உள்ளது. மேலும் விருதுநகர்-சாத்தூர் இடையேயான 4 வழிச்சாலையிலும் பல இடங்களில் சேதம் அடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் இருந்த போதிலும் இந்த சாலையை சீரமைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் எடுக்க தயாராக இல்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நடைமேம்பால திட்டப்பணியினை 5 ஆண்டுகளுக்கு பின்பு அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது வேதனைக்குரிய விஷயமாகும். மத்திய மந்திரி உத்தரவிட்ட பின்னரும் இந்த பிரச்சினையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையை கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை.

பொதுமக்கள் நலன் கருதி விபத்துகளை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நடைமேம்பாலங்களுக்கான திட்டப்பணிகளை தொடங்கி பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் பொதுநல வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Next Story