உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 23 Dec 2018 6:10 AM GMT (Updated: 23 Dec 2018 6:10 AM GMT)

அவன் படித்த இளைஞன். மலைக்கிராமம் ஒன்றில் பெற்றோரோடு வசித்து வந்தான். அரசு வேலை ஒன்றில் இருந்துகொண்டே சமூக சேவையிலும் ஈடுபட்டான். அந்த பகுதி மக்கள் அரசு சார்ந்த, கல்வி சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் அவனை நம்பி இருந்தார்கள்.

அவன் படித்த இளைஞன். மலைக்கிராமம் ஒன்றில் பெற்றோரோடு வசித்து வந்தான். அரசு வேலை ஒன்றில் இருந்துகொண்டே சமூக சேவையிலும் ஈடுபட்டான். அந்த பகுதி மக்கள் அரசு சார்ந்த, கல்வி சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் அவனை நம்பி இருந்தார்கள். அவனும் நேரங்காலம் பார்க்காமல் அந்த பகுதி மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்துகொண்டிருந்தான். அதனால் அவனுக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருந்தது. அவனது சேவை உணர்வை பாராட்டி நகரத்தில் உள்ள சில அமைப்புகள் விருதுகளும் வழங்கி கவுரவித்தன.

அந்த மலைக்கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்துவரும் குடும்பத்தினர் நிறைய பேர் வசித்து வருகிறார்கள். அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் அழகானவள். அவள் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பெற்றோரோடு சேர்ந்து விவசாய பணிகளுக்கு சென்றுகொண்டிருந்தாள். அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது அந்த இளைஞனின் எண்ணமாக இருந்தது.

ஆனால் அவனுக்கு பெயரும், புகழும் இருந்ததால் வசதியான சில குடும்பத்தினர் அவனுக்கு பெண் கொடுக்க முன்வந்தார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் செல்வாக்கையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள அவனது பெற்றோர் திட்டமிட்டார்கள். தங்கள் பேச்சை மகன் மீறமாட்டான் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியோடு ஒருசில வசதிபடைத்த குடும்பத்தினரோடு சம்பந்தம் பேசத் தொடங்கினார்கள். அதில் ஒரு குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தை முடியும் தருவாயில், மகனிடம் தகவல் தெரிவித்தார்கள்.

அவனோ தனக்கு வெளியே இருந்து பெண் தேடவேண்டாம் என்றும், மலைக்கிராமத்தில் உள்ள அந்த அழகான பெண்ணையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்தான். அதை கேட்டதும் அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ‘வரக்கூடிய வசதிவாய்ப்புகளை புறக்கணித்துவிட்டு, கூலி வேலைபார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாயே. உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவனை பக்குவமாகவும், பாசமாகவும், உணர்வுரீதியாகவும் எப்படி எல்லாமோ மிரட்டிப் பார்த்தார்கள். அவன் எதற்கும் மசியவில்லை. ‘எத்தனை வருடங்கள் ஆனாலும் தனக்கு திருமணம் நடந்தால் அது அவளோடு மட்டுமே நடக்கும். இந்த ஜென்மத்தில் தான் அவளைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை’ என்று அதிரடியாக கூறிவிட்டான்.

வருடங்கள் சில கடந்தன. காத்திருந்து பார்த்தார்கள். அவன் பிடிவாதமாக இருந்தான். அதனால் மனம் வெறுத்துப்போன பெற்றோர், அந்த மலைக்கிராம பெண்ணையே திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தார்கள்.

திருமணத்திற்கான ஒப்புதல் கிடைத்ததும், அவர்கள் இரு வரும் அவ்வப்போது ஜோடியாக ‘பைக்’கில் சுற்றினார்கள். அப்போதுதான் ஒரு நாள் அந்த கோர விபத்து நடந்தது. பைக் விபத்தில் சிக்கியது. அவன் இறந்துபோனான். அவள் தப்பித்தாள்.

அந்த சோகத்தில் அவள் துவண்டுபோனாள். வீட்டிலே முடங்கினாள். திருமணமே வேண்டாம் என்றாள். பெற்றோர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் எட்டு வருடங்களாக அவள் மனம்மாறவில்லை. இந்த நிலையில் அவள் வயது 30-ஐ தொட்டது. பெற்றோர் கஷ்டப்பட்டு ஒரு வரனை தேடிப்பிடித்து அவளுக்காக தேர்வு செய்தார்கள். அந்த நபர் நடுத்தர வயது தோற்றம் கொண்டிருந்தார். ஆனாலும் அவள் எதிர்ப்பு தெரிவிக்காமல், சம்மதித்தாள். கோவில் ஒன்றில்வைத்து திருமணத்தை எளிமையாக நடத்த முடிவுசெய்தார்கள்.

எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தையநாள் அந்த நபர் திடீரென்று பெண் வீட்டிற்கு வந்தார். ‘ஊரில் உங்கள் மகளை பற்றி தப்புத்தப்பாக பேசுகிறார்கள். அதனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதனால் திருமணம் நின்றது. பெண் வீட்டார் சோகத்தில் மூழ்கினார்கள்.

சில வாரங்களில் அவளது பெற்றோர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, கூலி வேலைக்கு செல்ல தொடங்கினார்கள். அவள் வீட்டில் தனியாக இருந்தாள். ‘யார் தப்புத் தப்பாய் பேசி திரு மணத்தை நிறுத்தியது?’ என்று அவள், நடந்தது தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில், அந்த சேவை இளைஞனின் தாயார், வீடு தேடி வந்து அவளை சந்தித்தாள்.

‘என் மகன், இந்த ஜென்மத்தில் உன்னைத்தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்றான். அதனால் அவன் செத்துப்போயிட்டாலும், இந்த ஜென்மம் முழுக்க நீ அவனுக்கு மட்டும்தான் பொண்டாட்டி. அவன் சாக நீதான் காரணம். அவன் செத்து, நீ மகிழ்ச்சியாக வாழவேண்டிதில்லை. நான் சாகறது வரை உன்னை எவனும் கல்யாணம் பண்ண விடமாட்டேன். நீ இப்படியே வாழாவெட்டியாக இரு..’ என்று கோபாவேசமாக கூறி, திருமணம் நிற்க தானே காரணம் என்பதை உணர்த்திவிட்டு கிளம்பிவிட்டாள்.

இப்படிப்பட்ட ‘வில்லி’ அம்மாக்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

- உஷாரு வரும்.

Next Story