போலீஸ் நண்பர்கள் குழுவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


போலீஸ் நண்பர்கள் குழுவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:00 AM IST (Updated: 23 Dec 2018 8:17 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நண்பர்கள் குழுவினர் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை பேசினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழுவினர் போலீசாருடன் இணைந்து செயல்படும் இரவு காவல் ரோந்து பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர்களுக்கு சீருடை, அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று காலை திருவண்ணாமலையில் நடந்தது. போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர துணை ஒருங்கிணைப்பாளர் ப.சிவராமன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை கலந்து கொண்டு போலீஸ் நண்பர்கள் குழுவினர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

போலீசாருடன் இணைந்து இரவு ரோந்து காவல் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீஸ் நண்பர்கள் மிகவும் உதவிகரமாக உள்ளனர். மேலும் போலீஸ் நண்பர்கள் குழுவிலுள்ள இளைஞர்களாகிய நீங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அக்கம்பக்கத்தில் புதிதாக நபர்கள் தென்பட்டாலோ அல்லது ஒரு நபரிடம் அதிகமாக பணம் புழக்கத்தில் இருந்தாலோ அவர்களை கண்காணித்து தகவல்களை போலீஸ் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும்.

சாலைகளில் செல்லும்போது மிகவும் கவனத்துடனும் செல்ல வேண்டும். இல்லையெனில் இப்போது மக்கள்தொகை அதிகமாக இருக்கும் காரணத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், சி.சுப்பிரமணியன், டி.கவிதா, தமிழாசிரியர் கு.சபரி, வக்கீல்கள் எஸ்.எல்.பாசறைபாபு, இரா.பச்சையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை டவுன் மற்றும் கிழக்கு போலீஸ் நிலையங்களுக்கு 70 போலீஸ் நண்பர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீஸ் நண்பர்களுடன் சேர்ந்து காவல்துறைக்கு இரவு ரோந்து காவல் பணிக்கு செல்ல உள்ளார்கள் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.


Next Story